என்னை குளோஸ் பண்ண அதுதான் காரணம்.. கும்பிட்டுக் கூறிய நாசர்!
Author: Hariharasudhan19 October 2024, 7:05 pm
தனது பிறந்தநாளில் வீடியோக்கள் உள்பட எதையும் பதிவிட வேண்டாம் என அமைச்சர் நாசர் திமுக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்கும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில், ஒன்றியச் செயலாளர் கமலேஷ் தலைமையில் இன்று (அக்.19) நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, அவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இதையடுத்து, அமைச்சர் நாசர் பேசுகையில், “நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து விடுங்கள். அதை வெடிக்க வேண்டாம். இதனால் மக்களுக்கு நம் மீது கோபம் வரும். அதற்கு பதில் நலத்திட்ட உதவிகளை வழங்கி விடலாம்.
இதையும் படிங்க: ஸ்டாலினிடம் ஒரேயொரு கேள்வி தான்.. கடுப்பான தமிழிசை!
வருகிற 21ஆம் தேதி எனக்கு பிறந்தநாள் வருகிறது. என் மீது அன்பு, பாசம் வைத்திருப்பவர்கள் தயவுசெய்து எனக்கு வாழ்த்துச் செய்தி வீடியோக்கள், படங்கள் எதையும் இணையம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம். அதுதான் என்னை குளோஸ் பண்ண முழுக் காரணம்” என இரு கைகளைக் கூப்பி கும்பிட்டபடி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். இது கட்சியினரிடையே சலசலப்பை உண்டாக்கியுள்ளது.