அமைச்சர் செஞ்சி மஸ்தானை மட்டம்தட்டி பேசிய அமைச்சர் பொன்முடி… சர்ச்சை வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan25 March 2023, 4:59 pm
விழுப்புரத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா இன்று முதல் துவங்கி அடுத்த மாதம் ஐந்தாம் தேதியுடன் முடிவடைகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு இன்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இங்கே முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளும் அதேபோல விழுப்புரம் மாவட்டத்தின் எழுத்தாளர்களின் படைப்புகளும் இந்த புத்தகத் திருவிழாவில் இடம் பெற்றுள்ளது.
அதனை பார்வையிட்ட பின்னர் புத்தகத் திருவிழாவின் மேடையில் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் எழுதிய நூல்களை அமைச்சர் பொன்முடி வெளியிட அதனை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொண்டார்.
பின்னர் பேசிய பொன்முடி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் அளித்துள்ள புத்தகங்களை அமைச்சர் மஸ்தான் படிக்க வேண்டும் எனவும் இதனால் பொது அறிவு வளரும் என்றும் அவர் படிக்காததை சுட்டிக்காட்டி மட்டம் தட்டி பேசிய அமைச்சர் பொன்முடி படித்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் ஒரு மருத்துவர் என்றும் அவர் பக்கத்தில் அமர்ந்துள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அந்த காலத்து பள்ளி படிப்பு படித்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டி இவர்கள் படிக்கவில்லை என்றாலும் இவர்களுக்கு அறிவு ஜாஸ்தி என்றும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு அறிவை வளர்த்துக் கொண்டார்கள் எனவும் மழுப்பி பேசினார்.
ஒரே மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் மறைமுக பனிப்போர் நடைபெற்றாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் செஞ்சி மஸ்தான் வருவதற்கு முன்பாகவே அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்து விடுவார் இது திமுகவினர் மத்தியிலே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும். இப்படி பொது மேடையில் அமைச்சரை மட்டம் தட்டி பேசி இருப்பது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.