ரெண்டே வருஷம்… ஸ்டார்ட் ஆஃப் தமிழ்நாடு திட்டத்தால் பல புதிய சிறு, குறு நிறுவனங்கள் உருவாகும் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..!!
Author: Babu Lakshmanan2 August 2022, 1:45 pm
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து பேசுவதற்கு நேரம் போதாது என மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Startup TN மதுரை வட்டார புத்தாக்க மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க மதுரை வட்டார புத்தாக்க மையத்தையும் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் வணிக வரி மற்றும் பாத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் பங்கேற்றனர். மதுரை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வட்டார புத்தாக்க மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது :- அதிமுக ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் செய்யவில்லை. முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என ஆர்.பி.உதயகுமார் அறிக்கை விடுத்தார். ஆர்.பி உதயகுமாரின் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து பேசுவதற்கு நேரம் போதாது. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
மழை நீரை விரைவாக உறிஞ்சி எடுக்க சூப்பர் சக்கர் லாரி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு மேலும் சூப்பர் சக்கர் லாரிகள் வாங்கப்படும். பெரிய முதலீட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முன் வந்தாலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிக முக்கியமானது. தமிழகத்தில் வேலை வாய்ப்புக்களை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது.
தமிழகத்தில் புதிய யுக்தியுடன் 2 இலட்ச ரூபாய் இருந்தால் தொழில் தொடங்கலாம். ஸ்டார்ட் ஆஃப் தமிழ்நாடு திட்டத்தில் சமூக நீதி காக்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் தொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்டார்ட் ஆஃப் தமிழ்நாடு திட்டத்தால் 2 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான புதிய சிறு, குறு நிறுவனங்கள் உருவாகும், என கூறினார்.