மோடி பேசுவதை அவ்வளவு சீரியஸா எடுத்துக்கக் கூடாது… தமிழிசை டெபாசிட் வாங்குவதே கஷ்டம் ; அமைச்சர் ரகுபதி..!!!

Author: Babu Lakshmanan
19 March 2024, 8:01 pm

தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடி அல்ல எங்கே போட்டியிட்டாலும் டெபாசிட் வாங்க போராட வேண்டி இருக்கும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அமைச்சர் ரகுபதி மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அமைச்சர் ரகுபதி கூறியதாவது :- தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடி அல்ல, எங்கே போட்டியிட்டாலும் டெபாசிட் வாங்க போராட வேண்டி இருக்கும். ஆளுநர் ஆர்.என். ரவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பீகாரில் நிதீஷ் குமாருக்கு போட்டியாக தேர்தலில் போட்டியிட போவதாகவும் தகவல் வந்துள்ளது.

நாங்கள் முன்னாள் ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக தான் விமர்சனம் செய்துள்ளோமே தவிர, தனிப்பட்ட முறையில் நாங்கள் விமர்சனம் செய்து இழிவு படுத்தவில்லை. ஜெயலலிதாவை யார் இழிவுபடுத்தினார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

வருகின்ற தேர்தலில் இரண்டாவது இடத்திற்காக பாஜக, அதிமுக என யார் வேண்டுமானாலும் போட்டி போட்டுக் கொள்ளட்டும். ஆனால், இரண்டாவது இடத்தில் ஒரு திராவிட கட்சி வந்தால் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம். அதிமுகவின் நிலையை தற்போது காணும்போது பரிதாபமாக உள்ளது.

தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது :- தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக அரசியல் கட்சியில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு மீண்டும் தற்போதைய எம்பி ஆக உள்ள கார்த்தி சிதம்பரம் போட்டியிட வாய்ப்பு அதிகம் உள்ளது.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதால் எங்களுக்கு தூக்கம் நிம்மதியாக வருகிறது. நாங்கள் தூக்கத்தை இழந்து தவிக்கவில்லை. யாரைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. அவர் தான் தூக்கத்தை இழந்து தவித்து தமிழகத்திற்கு அடிக்கடி வந்து கொண்டுள்ளார். எத்தனை முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தாலும், தாமரைக்கு தமிழகத்தில் வேலை இல்லை.

தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. நாங்கள் யாரும் ஜெயலலிதாவை இழிவுபடுத்தவில்லை. அவர் என்னென்ன இழிவுபடுத்தினார் என்பதை பிரதமர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரசியல் ரீதியாக யாரை எதிர்க்க வேண்டுமோ, அவர்களை நாங்கள் எதிர்த்து கொண்டு தான் உள்ளோம். கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தான் நாங்கள் அவரை எதிர்த்தோம். சிஏ சட்டம் நிறைவேறுவதற்கு காரணம் அதிமுக தான். அதை கொண்டு வருவதற்கு காரணமும் அதிமுக தான். மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் தெரிவித்த கருத்துக்களால் பெண்கள் கொதித்து எரிந்துள்ளனர். அவர்களுடைய குறிப்பு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்குகளை அளித்து சரியான பதிலடி கொடுப்பார்கள்.

இந்த நிலைமை வரை திமுக பாஜக இடையே தான் போட்டி என்ற நிலை இல்லை. எங்களுடைய கூட்டணி வளமான கூட்டணியாக இருக்கும் என்று எடப்பாடி சவால் விட்டார். ஆனால் இன்று கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் வேலுமணியும், தங்கமணியும் திண்டாடி வருகின்றனர். அப்போது, இருந்த அதிமுக வேற இப்போது உள்ள அதிமுக வேற, எனக் கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், பாஜக வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என்று எங்களை கூறிவிட்டு, தற்போது மேடையில் பிரதமர் மோடியுடன் வாரிசு அரசியல்காராக தான் இருந்தனர். அவர்களோடு சேர்ந்தால் புனிதர்கள் அவர்கள் எதிர்த்தால் ஊழல்வாதிகள் என்று பாஜகவின் கூறி வருகின்றனர், என்றார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 274

    0

    0