இந்த ஆண்டும் தைப்பூசத்திற்கு சிறப்பு கட்டணம் வசூலிப்பா..? அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய தகவல்…!!

Author: Babu Lakshmanan
10 January 2024, 2:19 pm
Quick Share

தை பூசத்திற்கு சிறப்பு கட்டணம் ரத்து குறித்து முதல்வரிடம் ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட துறை நிலை ஓய்வூதிய பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். அந்த வகையில் 2023 – 2024 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், ஓய்வுபெற்ற திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடையாக ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இப்புதிய திட்டத்தின் மூலம் 2,646 துறை நிலையிலான ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர். அதனைத் தொடர்ந்து, அறுபடை திருத்தலங்களுக்கு பக்தர்களை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது :- ஆட்சி அமைந்து இதுவரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 304 நிகழ்ச்சி நடந்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தாலும், இந்து சமய அறநிலைத்துறை நிகழ்ச்சியில் இதுவரை 58 நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டு இருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் ஒருவர் அதிக முறை இந்து சமய அறநிலையத்துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வராக நமது முதல்வர் உள்ளார்.

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி அறுபடை வீடுகளாக உள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு 200 பக்தர்களை ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம். அதன்படி, அறுபடை வீடுகளுக்குக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணம் வருகின்ற 28 ஆம் தேதி அன்று தொடங்குகிறது.

இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர்கள். ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும். 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த ஆன்மீக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 200 பேர் கட்டணம் இல்லாமல் முழுமையாக 50 லட்சம் ரூபாய் செலவில் அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது, இந்தியாவில் முதல்முறையாக அரசின் சார்பில் மானியமாக துவங்கப்பட்ட திட்டம் இந்த திட்டம். இந்த ஆண்டு ரூபாய் 75 லட்சம் செலவில் அரசு முழுமையாக மானியம் வழங்கி 300 நபர்களை ராமேஸ்வரம் அழைத்து செல்லப்பட உள்ளார்கள்.

மானசரோவர், முக்தினாத் கோவில்களுக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கான மானியம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு இந்த ஆண்டும் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும். இந்த ஆண்டு தை பூசம் வெகு விமரிசையாக நடப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தை பூசம் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும். அந்த பத்து நாட்களும் பழனியில் தினமும் 10,000 பேர் அன்னதானம் பெரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

போதிய காவல்துறையின் பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தை பூச ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் பேச உள்ளோம். தை பூசத்திற்கு சிறப்பு கட்டணத்தை ரத்து செய்தால், பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்ய நேரிடும் என்றால், பக்தர்களின் நலன் குறித்து அந்த கட்டணத்தை ரத்து செய்யும் முடிவை இந்து சமய அறநிலையத் துறை நிச்சயம் மேற்கொள்ளும் இன்றைய கூட்டத்திற்கு பிறகு, முதல்வரிடம் ஆலோசித்து அந்த முடிவை நாங்கள் எடுப்போம், என்றார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 265

    0

    0