கோவை புறக்கணிப்படும் என கூறியதை பொய் என நிரூபித்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி : உதயநிதி புகழாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2022, 4:39 pm

பொறுப்பான செல்லப்பிள்ளையாக கடைசி வரை நடந்து கொள்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர், முதன் முறையாக கோவைக்கு வருகை தந்தார்.

கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்க உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரில் யாரும் வரவில்லை. அவர்களுக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னிந்தியாவின் மான்ஸ்செஸ்டரான கோவை கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குகிறது. உழைப்பால் சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது.எத்தனையோ முறை கோவைக்கு வந்திருக்கிறேன். முதன் முதலாக ஒரு அமைச்சராக பொறுப்பேற்று முதல் சுற்றுப்பயணத்தில் கோவைக்கு வந்துள்ளேன்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த செந்தில் பாலாஜியால் தான் முடியும். அந்த ஆற்றல், செயல்திறன் அவருக்கு உண்டு. இந்த விழாவில் 22 ஆயிரம் பேருக்கு 368 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

செயலற்ற அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளுக்கும் சேர்த்து பணியாற்றும் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளார். திராவிட மாடல் அரசிற்கு வலுசேர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை செந்தில் பாலாஜி நடத்துகிறார்.

கோவை மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லை என கவலைபட்ட நிலையில், செந்தில் பாலாஜி கரூர்காரர் என்பதை விட, கோவை செந்தில் பாலாஜி என மக்கள் நினைக்கும் அளவிற்கு பணியாற்றி வருகிறார்.

கோவையையும், கரூரையும் தனது இரண்டு கண்களாக செந்தில் பாலாஜி பார்க்கிறார். திமுக ஆட்சி அமைந்தால் மாதம் ஒரு முறை கோவைக்கு வருவதாக வாக்குறுதி அளித்தேன். அதை ஓரளவு செய்துள்ளேன்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதும், கோவை மக்களை சந்தித்து மனுக்களை பெற்ற போது, இவ்வளவு மனுக்களுக்கு தீர்வு காண முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, இதுவரை 1 இலட்சத்து 55 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளார்.கோவை மக்களின் கோரிக்கைகள், பிரச்சனைகளை கேட்டு தீர்வு காண கண்ட்ரோல் ரூம் திறந்தார்.

மின்னகம் மூலம் 99 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 2 இலட்சம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கிய நிலையில், ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கியுள்ளார். திமுக ஆட்சியில் 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு திமுக எம்.எல்.ஏ கூட இல்லை. கோவை புறக்கணிக்கப்படும் என சொன்னதை பொய் என அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முதலமைச்சர் நிரூபித்துள்ளனர்.

அதிக நலத்திட்டம் பெற்ற மாவட்டம் கோவை. எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. அதிமுகவினராக இருந்தாலும், பொய் செய்தியை பரப்பும் பாஜகவினராக இருந்தாலும் அவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது. இந்தியாவின் நெம்பர் 1 ஸ்டேட் என்ற பெருமையை இந்தியா டூடே வழங்கியுள்ளது.

திராவிட மாடல் அரசையும், முதலமைச்சரையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் சாதனைகளையும், செய்திகளையும் எதிர்கட்சியினருக்கும் கொண்டு செல்லுங்கள்.

விளையாட்டு துறை சார்ந்து எப்போதும் வேண்டுமானாலும் கோரிக்கைகளை நீங்கள் கேட்கலாம். அதை நிறைவேற்றி தர தயாராக இருக்கிறேன். சென்னையை தாண்டும் அளவிற்கு செந்தில் பாலாஜி கோவையை வளர்த்தெடுப்பார்.

கலைஞரின் பேரின், முதலமைச்சரின் மகன், மாண்புமிகு அமைச்சர் என எவ்வளவோ பெருமைகள் இருந்தாலும், உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், பொறுப்பான செல்லப்பிள்ளையாக கடைசி வரை நடந்து கொள்வேன் எனத் தெரிவித்தார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…