பாஜகவுக்கு எங்க தளபதி பத்தி இன்னும் தெரியல… எங்க ஆட்டம் இதை விட மோசமா இருக்கும் ; கொக்கரித்த அமைச்சர் டிஆர்பி ராஜா!!

Author: Babu Lakshmanan
14 June 2023, 7:46 pm

திமுக குறித்தும், கலைஞர் குறித்தும் பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கற்றுத் தருவார் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ள தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள டைடல் மற்றும் எல்காட் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார். அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர், அங்குள்ள நவீன வசதிகள் குறித்து ஆய்வு செய்து பின்னர் அங்கு பணிபுரியும் பணியாளர்களுடன் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் தொழில்துறை வளர்ச்சிக்கான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியதாவது :- கோவையில் ஜிசிசி க்கான வளர்ச்சியே கொண்டு வருவதற்கான பணிகளை டைடல் செய்து கொண்டிருக்கிறது. கோவையை பொருத்தவரை நிலங்கள் கிடைப்பதில் சில பிரச்சனைகள் உள்ளது. எனவே இருக்கின்ற நிலங்களில் ஐடி சார்ந்த துறைகளில் புதிய வளர்ச்சிகளை கொண்டு வருவதற்கான வேலைகளை முதலமைச்சர் செய்து வருகிறார், என தெரிவித்தார்.

அப்போது, LuLu மால் கொண்டுவர விடமாட்டோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அவர்கள் இன்னும் சிறுபுள்ளைத்தனமான வேலைகளை செய்யாமல் ஆக்கபூர்வமான வேலைகளை தமிழகத்திற்கு செய்ய வேண்டும் என பதில் அளித்தார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் சோதனை குறித்து கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், இதைவிட பெரிய முதலைகளை எல்லாம் சந்தித்த இயக்கம் திமுக. நிச்சயமாக இந்த அடக்கு முறையில் இருந்தும் இன்னும் வலிமையாக வெற்றி நடைபோடும். நிச்சயமாக அவர் மீது எந்த குற்றமும் இல்லை என நிரூபித்து வெளிவருவார். அடக்க வேண்டும் என நினைத்தால், வேகமாக எழும் இயக்கம் திமுக.

கலைஞரின் வளர்ப்புகள் நாங்கள், தளபதியின் பிள்ளைகள், தம்பிகள் நாங்கள். இதைவிட எதிர்த்து தான் அடிப்போமே தவிர, இதற்காக பயந்து போக கூடிய ஆட்கள் நாங்கள் இல்லை. மேலும், கைது நடவடிக்கையில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். பதவியில் உள்ளார்கள் (பாஜக) என நினைப்பில் பலரும் ஆடுகிறார்கள் என கூறிய அவர், ஆடுகிறார்கள் என்பதில் “ஆடு” என்பதை மட்டும் அழுத்தி கூறினார்.

தமிழ்நாடு முதல்வர் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு முதலீடுகளை கொண்டு வந்து சேர்ப்பதாக தெரிவித்தார். தற்போது திராவிட மாடல் அரசு மத்திய அரசாங்கத்திற்கு ஒரு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக உள்ளது. முதலமைச்சர் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அதனை கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே அவர்களிடம் உள்ள துறைகளை ஏவி விட்டு ஏதாவது செய்யலாமா பார்க்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் திமுக பற்றி தெரியவில்லை, கலைஞர் பற்றி தெரியவில்லை. இதையெல்லாம் அவர்களுக்கு முதலமைச்சர் கற்று தருவார் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அங்குள்ள நிறுவனங்களில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • tvk leader vijay respect ambedkar today morning அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை; உறுதியேற்ற தவெக தலைவர் விஜய்…