பிரதமர் மோடியிடம் சனாதனத்தை ஒழித்து விட்டோம் என கூற முடியுமா…? செல்லூர் ராஜுக்கு அமைச்சர் உதயநிதி கேள்வி..!!

Author: Babu Lakshmanan
22 September 2023, 11:27 am

அண்ணா பெயரில் கட்சியும், கொடியும் வைத்துள்ள நீங்கள் சனாதனத்தை பற்றி என்ன கூறுகிறீர்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாநகர திமுக சார்பில் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மதுரை கல்லூரியில் நடைபெறுகிறது. விழா மேடைக்கு வந்த திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது :- கலைஞர் நூற்றாண்டு விழாவில் மதுரை மாநகர சார்பாக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்க நடைபெறும் விழாவில் பங்கேற்றுள்ளேன். நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதில் பெருமைப்படுகிறேன். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மதுரை மாவட்டத்தின் சார்பாக பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்த அண்ணன் மூர்த்தி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக பொறுப்பேற்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று காலை முதல் மாலை வரை மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். தலைவர் தலைமையில் இளைஞரணி மாநாடு 2007லில் நெல்லையில் நடைபெற்றது. தற்போது சேலத்தில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்று வாழ்த்த வேண்டுகிறேன்.

கழக இளைஞர் அணி மதுரை ஜான்சிராணி பூங்காவில் துவங்கப்பட்டது. கலைஞர் 1971 இல் மதுரை மாநகராட்சியாக உயர்த்தினார். மதுரைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர், தற்போது கலைஞர் நூற்றாண்டு நூலகம் 150 கோடியில் துவங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்களை வெற்றி பெற்று கண்டது கழகம் தான், ஜல்லிக்கட்டு போட்டிக்கான மிகப்பெரிய அரங்கம் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முப்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 40 லட்சம் பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது. மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கான உதாரணம்தான் கடந்த மாதம் ஒரு கட்சியின் மதுரையில் நடந்த மாநாடு. இந்த மாநாட்டில் 21ஆம் தேதி பெரிய விவாதமே நடைபெற்றது. சாம்பார் சாதம் மற்றும் புளியோதரை குறித்து மிகப்பெரிய விவாதம் நடைபெற்றது.

கலைஞர் ஐந்து முறை முதல்வராக இருந்தவர். தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்தவர். அதற்கு முக்கிய காரணம் நீங்கள்தான். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது சனாதன ஒழிப்பு மாநாடு. அதில் நான் பேசியது ஐந்து நிமிடம் தான். ஆனால் நான் பேசாததை பேசியதாக கூறி எனது தலைக்கு 10 கோடி ரூபாய் விலை பேசி உள்ளனர். அண்ணன் செல்லூர் ராஜு அவர்களே அண்ணா பெயரில் கட்சியும், கொடியும் வைத்துள்ள நீங்கள் சனாதனத்தை பற்றி என்ன கூறுகிறீர்கள்.

சனாதனத்தை ஒழித்து விட்டதாக அண்ணன் செல்லூர் ராஜு கூறுகிறார், உங்களின் ஓனர் அமித்ஷா, மோடியிடம் சனாதனத்தை ஒழித்து விட்டோம் என கூற முடியுமா…? எனது தலைக்கோ 10 கோடி என்றால் அண்ணன் செல்லூர் ராஜு தலைக்கு எத்தனை கோடி வரும். சினிமாவில் நடித்துதான் உதயநிதி வந்ததாக கூறுகின்றார் செல்லூர் ராஜு. உங்கள் கட்சியின் மறைந்த தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மையார் சினிமாவில் இருந்து தான் வந்தனர்.

சிஏஜியில் ஏழரை கோடி ரூபாய் ஊழலில் செய்துள்ளனர். கடந்த 9 வருடங்களில் என்ன செய்து உள்ளீர்கள். ஏழரை லட்சம் கோடி ரூபாய் எங்கே சென்றது. ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை போட கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஒன்றிய அரசு இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு ஆயுஷ்மான் திட்டத்தில் இன்சூரன்ஸ் பதிவு செய்ததில் ஊழல் நடைபெற்று உள்ளது.

முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். கட்டணமில்லா பேருந்து, மாதம் ஆயிரம் ரூபாய், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், பெண் கல்வி திட்டம், அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு எந்த கல்லூரிக்கு சென்றாலும் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவி திட்டம், ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் திட்டம், 1976 இல் மிசா காலம் கலைஞர் ஒருவருடம் சிறை தண்டனையில் இருந்தார். கலைஞரை சந்திக்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னைக்கு வந்தனர்.

ஒரு பேரனாக எனது தாத்தாவிற்கும், கழக நிர்வாகிகளுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு பெருமை. பெரியார், பேரறிஞர் அண்ணாவை நேரில் சந்தித்தது இல்லை. கலைஞரை மட்டுமே பார்த்துள்ளேன். ஆனால், நீங்கள் பெரியார், அண்ணாவை நேரடியாக சந்தித்து இருப்பீர்கள். உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன், என அமைச்சர் உதயநிதி கூறினார்

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 304

    0

    0