திமுக வன்முறையை எப்பொழுதும் ஆதரிக்காது… ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல்.. அமைச்சர் உதயநிதி பேட்டி!!
Author: Babu Lakshmanan26 October 2023, 1:03 pm
திமுக வன்முறையை எப்பொழுதும் ஆதரிக்காது என்றும், வன்முறைக்கு எதிராக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குடும்ப தலைவர்களுக்கு அண்ணா பிறந்தநாள் முதல் விண்ணப்பத்திலிருந்து தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் கடந்த செப்டம்பர் 15 முதல் தமிழக அரசு செலுத்தி வருகிறது. விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு நிதி உதவி கிடைக்கவில்லை அவ்வாறு தகுதி இருந்தும் கிடைக்காதவர்கள் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இதுவரை 9,951 பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று பல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இளைஞர் அணி தலைவர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்துள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அவருடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார் வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நிராகரிக்கப்பட்ட மனுக்களின் பயனாளர்களிடம் தொலைபேசியில் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :- சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டபடி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தகுதியுடைய ஒரு பெண்கள் கூட விடுபடக் கூடாது என்ற நோக்கில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு, நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. தகுதி உடையோர்களுக்கு நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். மேலும், விடுபட்ட பயனாளர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறிய பயனாளர்கள் என அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
ஆளுநர் உயிருக்கு திமுகவினரால் அச்சுறுத்தல் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டது குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் திமுக ஒரு பொழுதும் வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும் துணை போகாது. அவ்வாறு வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் மீது திமுக சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள தயங்காது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சி சார்பாக கலந்து கொள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் விரைந்து சென்றார்.