கார் விபத்தில் மாயமான மகன்.. துப்பு கொடுத்தால் ரூ.1 கோடி : சைதை துரைசாமி அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2024, 2:29 pm
கார் விபத்தில் மாயமான மகன்.. துப்பு கொடுத்தால் ரூ.1 கோடி : சைதை துரைசாமி அறிவிப்பு!!
அதிமுகவை சேர்ந்த சைதை துரைசாமி சென்னை முன்னாள் மேயராகவும், சைதாப்பேட்டை முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். இவரது மகன் வெற்றி. இவர் கார் மூலம் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள காசாங் நாலா எனும் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இவரது கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது, அவர் சென்ற கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சைதை துரைசாமி மகன் வெற்றி மாயமானார். அவருடன் காரில் சென்ற திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் படுகாயமடைந்து மீட்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் இவர்களுடன் சென்ற வெற்றியை மட்டும் காணவில்லை. வெற்றியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுற்றுலா சென்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளாகி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மாயமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மாயமான வெற்றியை தேடும் பணிகள் துரிதப்படுத்தியுள்ளது. இரண்டு நாளாக தேடியும் மகன் கிடைக்காததால் தற்போது சைதை துரைசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கார் கவிழ்ந்த விபத்தில் சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று சைதை துரைசாமி அறிவித்துள்ளார். ஒரு கோடி ரூபாய் சன்மானம் குறித்த தகவலையும் மகனின் புகைப்படத்தை காண்பித்து சட்லெஜ் நதிக்கரையோரம் வசிக்கும் பழங்குடி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்குமாறும் சைதை துரைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.