விஜய் – ஸ்டாலின் ஒரே நாளில் மறைமுக மோதல்.. பரபரப்பில் அரசியல் களம்!
Author: Hariharasudhan7 February 2025, 11:11 am
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மறைமுகமாக விமர்சித்தது பேசுபொருளாகியுள்ளது.
திருநெல்வேலி: இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று நெல்லை சென்றார். அப்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றதன் வகையில், நெல்லை பாளையங்கோட்டை நேரு கலையரங்கில் திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இதில், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் தயா சங்கர், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். பின்னர், இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
கட்சி தொடங்கிய உடனே தான்தான் முதலமைச்சர் என்று கூறுவது எல்லாம் மக்களிடம் எடுபடாது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்யும் இயக்கம் திமுக” எனத் தெரிவித்தார். இதன் மூலம், தவெக தலைவர் விஜயை, ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.
அதேநேரம், நேற்று தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “பெரியாரே எங்கள் தலைவர்; தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்’ என்று சூழலுக்கு ஏற்றவாறு தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே அவரைப் பற்றிப் பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள், சமூக நீதியைக் காக்கும் செயல்பாடான சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பாத்ரூம் சென்ற கர்ப்பிணி.. காத்திருந்த கொடூரன்.. இபிஎஸ் காலையிலே போட்ட பதிவு!
முன்னதாக, பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு, “பெரியாரே எங்கள் தலைவர்; தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்’ என ஸ்டாலின் பதில் அளித்திருந்தார். அதேநேரம், சீமானுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது எனக் கூறிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் திமுகவின் தலைவர், விஜயை மறைமுகமாக தாக்குவது பேசுபொருளாகியுள்ளது.