முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் பணம், நகை கொள்ளை : சிசிடிவி காட்சியில் சிக்கிய 4 பேர்.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
27 January 2022, 5:48 pm

திருப்பூர் : முன்னாள் சபாநாயகர் மற்றும் தற்போதய அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் தனபால் வீட்டு கதவை உடைத்து 4 பேர் கொண்ட மர்ம கும்பல் 1 லட்சம் ரூபாய் பணம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி குத்து விளக்கு கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும் தற்போதைய அவிநாசி சட்டமன்ற உறுப்பினருமான ப.தனபால் அவிநாசியை அடுத்து ராக்கியாபாளையத்தில் சொர்ணபுரி ரிச்லேன்ட் 12-வது வீதியில் 2 வீடுகளில் குடும்பத்துடன் வாடகைக்கு தங்கி வருகிறார். பொங்கலை முன்னிட்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள தாதக்காபட்டி கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை, ராக்கியாபாளையத்தில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், தனபாலின் வீட்டிற்குள் இன்று அதிகாலை சத்தம் கேட்டதாக தனபால் மகனான லோகேசுக்கு போன் மூலம் தகவல் சொல்லியுள்ளனர்.

இதையடுத்து, அவிநாசியில் உள்ள கட்சியினருக்கு தகவல் சொல்லி வீட்டில் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக லோகேசும், போலீசாரும் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு வெள்ளி குத்து விளக்குகளும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து திருமுருகன்பூண்டி போலீசார் அந்த வீதியில் ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனை மேற்கொண்டதில், இன்று அதிகாலை 4 மணிக்கு அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் தடியுடன் வந்தது தெரியவந்தது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 3548

    0

    0