நாமம் போடவும், பட்டை அடிக்கவும் உரிமை உள்ளது அதே போல நாத்திகத்தையும், ஆத்திகத்தையும் கிண்டல் செய்ய கூடாது : கமல் கருத்து!!
Author: Udayachandran RadhaKrishnan16 February 2022, 8:06 pm
கோவை : நாமம் போடவும், பட்டை அடிக்கவும் எல்லாருக்கும் உரிமையுண்டு எனவும், நாத்திகத்தையும் ஆத்திகத்தையும் கிண்டல் அடிக்கக்கூடாது என்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
கோவையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வந்த மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், பந்தய சாலை பகுதியில் உள்ள தாஜ்ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது : சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. கோவையில் சூயஸ் திட்டத்தை தடை செய்யவில்லை, அதை துரிதப்படுத்தி இருக்கின்றனர்.
வாக்குறுதிகளை கூட்டித் தள்ளிவிட்டு தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. தற்போது ஊழலுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போட்டியைதான் ஊடகங்கள் பார்த்து கொண்டு இருக்கின்றன. ஊடகங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும். எங்களை அச்சுறுவதும், விலகி கொள்ள சொல்வதும் பாராட்டு கூட்டங்களாகவே கருதுகின்றோம்.
கமல் வெற்றிபெற்றால் மோடி வந்துவிடுவார் என பிரச்சாரம் செய்கின்றனர். மோடி வெற்றிபெற்று கவுன்சிலராக போகின்றாரா? அவர் பற்றி கவலையில்லை. எங்களை பி டீம் என்று சொல்லி பார்த்தார்கள், இப்போது கமல் வந்தால் மோடி வந்துவிடுவார் என்று சொல்லி பிற கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன.
நான் ரொம்ப கெஞ்ச மாட்டேன், நேர்மையாளர்களுக்கு ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். நகர்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக எதிர்கொள்வேன். கிராம சபை நடத்தப்படுவதை போல ஏரியா சபை, வார்டு கமிட்டி நடப்பதை உறுதிசெய்வேன். நீட் தேர்வை ஒழிப்பேன் என்றவர்கள் இப்பொது நீட்டுக்கு டியூசன் என்கின்றனர்.
எங்கள் கட்சியில் இருந்து யாரும் வேறு கட்சிக்கு தாவவில்லை, எங்கள் கட்சியினரை கொத்திக்கொண்டு போகின்றனர். ஹிஜாப் விவகாரம் குறித்த கேள்விக்கு நாமம் போடவும், பட்டை அடிக்க என எல்லாருக்கும் உரிமையுண்டு, நாத்திகத்தையும் கிண்டல் அடிக்க கூடாது, ஆத்திகத்தையும் கிண்டல் அடிக்கடி கூடாது.
ஓரே ஒரு அரசியல் கட்சிதான் இதன் பின்னணியில் இருக்கின்றது. சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா காரணமாக மக்களை சந்திக்க இயலவில்லை. ஆனால் கட்சியினர் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். கோவையில் மக்கள் நீதி மய்யம் வாங்கும் ஒவ்வொரு ஓட்டுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் மரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். வேட்பாளர்களை ஆதரித்து வேனில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொண்ட கமலஹாசன் “இவர்கள் கடமையை செய்ய வந்தவர்கள், அவர்கள் வியாபாரத்திற்கு வந்தவர்கள். இதை புரிந்து கொள்ளா விட்டால் கோவை விளங்காது.
பணம்,பொருள் கொடுத்தால் வாங்கி வைத்துகொள்ளுங்கள் என்று சொல்ல மாட்டேன், அது சுயமரியாதை சம்மந்தப்பட்ட விசயம். சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் எதுவும் மாறவில்லை. ஊழல் ஆட்சியில் கொசுக்கள்தான் சந்தோசமாக வாழ்கின்றது. மக்கள் அல்ல. ம.நீ.ம வேட்பாளர்கள் வரவு செலவு கணக்கை காட்டுவார்கள். ம.நீ.மவிற்கு போடும் ஓவ்வொரு ஓட்டுக்கும் மரம் கொடுப்போம்.” என்றார்.
0
0