முன்னாள் ராணுவ வீரர்களை குறிவைத்து மோசடி… ரூ.35 லட்சம் வரை அபேஸ் செய்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது..!

Author: Babu Lakshmanan
24 November 2022, 11:19 am

வேலூர் ; மாதாமாதம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி 35 லட்சம் வரை ஏமாற்றிய முன்னாள் ராணுவ வீரர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் இராணுவ வீரர் செந்தில்குமார்(39). இவர் ரைட் சாய்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில், ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் மாதம் 5 ஆயிரம் வட்டி தருதாகவும், அசல் ஒரு லட்சத்தை ஓராண்டில் திருப்பித் தருவதாகவும் கூறி விளம்பரம் செய்து பலரிடம் பல லட்சம் பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் பேலூரை சேர்ந்த கண்ணண் என்பவரின் மனைவி அகல்யா (29) என்பவரும் செந்திலுடன் சேர்ந்து இத்தொழிலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் 2, 3 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு மாதாமாதம் வழங்க வேண்டிய 5 ஆயிரம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கே வி குப்பம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கௌதம் உட்பட 12 பேர் புகார் அளித்துள்ளனர்.

எஸ் பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 35 லட்சம் பெற்று மோசடி செய்த வேலூர் ஓல்டு டவுன் பகுதி சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செந்தில்குமார் (39) மற்றும் சேலம் பேலூர் பகுதியை சேர்ந்த அகல்யா (29) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ரைட் சாய்ஸ் என்ற கம்பெனி பெயரில் பலரிடம் பல லட்சம் மோசடி செய்திருப்பதாகவும், ஏமாற்றப்பட்ட பெரும்பாலானோர் முன்னாள் ராணுவத்தினர் என்பதும் தெரிய வந்தது. இது குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்கள் இது போன்ற போலியான நபர்களையும், போலியான அறிவிப்புகளையும் நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி