ஏப்ரல் 19க்கு பிறகும் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு : சத்யபிரதா சாகு முக்கிய அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2024, 2:20 pm
ஏப்ரல் 19க்கு பிறகும் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு : சத்யபிரதா சாகு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை பறக்கும்படை சோதனையில் ரூ.208.41 கோடி ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை பறக்கும்படை சோதனையில் ரூ.208.41 கோடி ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ரூ.4.53 கோடி மதிப்புள்ள மது பாட்டில்கள்; ரூ.99.38 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களும் அடங்கும்.
தாம்பரத்தில் பிடிபட்ட ரூ.4 கோடி தொடர்பாக தேர்தல் சிறப்பு குழு விசாரணை நடைபெறுகிறது. ரூ.1 கோடிக்கு மேலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் இதனை தேர்தல் சிறப்பு குழு விசாரிக்கிறது. இது தொடர்பாக செலவின பார்வையாளர் அறிக்கை சமர்பிக்க உள்ளார்.
இதுவரை 36.4 சதவீத பூத் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.,19ல் தேர்தல் முடிந்தாலும், ஜூன் 4ம் தேதி வரை பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.