குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குரங்குகள் அட்டகாசம் : பொதுமக்கள் அவதி…
Author: kavin kumar26 February 2022, 1:34 pm
தருமபுரி : பென்னாகரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குரங்குகளின் அட்டகாசத்தால் அவதிப்படுவதாக தொடர்ந்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சின்னபெரமனூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒகேனக்கல் வனபகுதியில் ஏராளமான குரங்குகள், யானை, மான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. தற்பொழுது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் உணவு இல்லாத நிலையில் காடுகளில் வசித்து வந்த குரங்குகள் உணவைத் தேடி அருகிலுள்ள கிராமங்களுக்கு படையெடுக்க தொடங்கி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து சென்று விடுகின்றன. மேலும் ஓட்டு வீட்டின் மேல் அமர்ந்து ஓடுகளை கீழே தள்ளி விடுகின்றன. இதனால் அடிக்கடி வீட்டை பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மின்வயர்கள், வீட்டிற்கு வெளியே காயவைக்கப்பட்ட துணிகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கொண்டுவரும் உணவுகளை பிடுங்கி செல்கின்றன. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர்.
மேலும் விவசாயிகள் தங்கள்து நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மா, தென்னை, கொய்யா மற்றும் புளி, மிளகாய், உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகிறது. இவ்வாறு அட்டகாசம் செய்யும் குரங்குகளை என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட வனத்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த புகாரை பெற்று கொண்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறியதோடு தங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் குரங்குகளை உடனே பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.