ஊற்றிக் கொடுத்த PET சார்.. மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை.. திருச்செந்தூர் வழக்கில் திருப்பம்!
Author: Hariharasudhan12 November 2024, 11:58 am
திருச்செந்தூரில் பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் பள்ளி முதல்வர், செயலர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பொன்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவர் அப்பள்ளியில் படிக்கும் ஐந்து மாணவிகளை, கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் சென்றுள்ளார். இவ்வாறு அவர்கள் சென்ற மறுநாளே போட்டி நடைபெற இருந்துள்ளது.
இதனால் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்த நேரத்தில் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், மாணவிகளை மது அருந்தச் சொல்லி வற்புறுத்தி, மதுவைக் கொடுத்துள்ளார். இதனையடுத்து, உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், மாணவிகளிடம் அத்துமீறு நடந்துள்ளார்.
மேலும், இது குறித்து பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தால் உங்களைப் படிக்க முடியாத அளவிற்குச் செய்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார். இருப்பினும், மாணவிகள் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: பெண்ணாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மகன்.. வெளியான ஷாக் வீடியோ!
ஆனால், இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, நேற்று (நவ.11) பிற்பகல் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர், தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்டக் கல்வி அலுவலர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.
இதனையடுத்து, கோவையில் தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் கைது செய்யப்பட்டு, திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில், இன்று (நவ.12) பள்ளியின் முதல்வர் சார்லஸ் மற்றும் பள்ளி செயலர் சையது அகமது ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். மேலும், இது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.