தாய் இறந்தது தெரியாமல் சுற்றி சுற்றி வரும் கன்று குட்டி… மனிதர்களின் அலட்சியத்தால் பறிபோன உயிர்… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
18 August 2023, 11:58 am

மேட்டுப்பாளையம் அருகே சட்டத்துக்கு புறம்பாக கொட்டப்பட்ட உருளைக்கிழங்கு கழிவுகளைத் தின்ற பசுமாடு இறப்பு தாயைப் பிரிந்த கன்று குட்டி பரிதவித்து வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே விதிமுறைகளை மீறி பவானி ஆற்றங்கரை கரையோரத்தில் கொட்டப்பட்ட உருளைக்கிழங்கு கழிவுகளை தின்ற பசுமாடு உயிரிழந்ததால் தாயைப் பிரிந்த இரண்டு மாத கன்று குட்டி பரிதவித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் மொத்த விற்பனை கூடங்கள் ஏராளமாக உள்ளது. இங்கு நாள்தோறும் கிழங்கு மண்டிகளில் மீதமாகும் உருளைக்கிழங்கு கழிவுகளை குழி தோண்டிபுதைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால், ஒரு சில மண்டி உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி இரவு நேரங்களில் கழிவுகளை வாகனங்களில் கொண்டு சென்று மேட்டுப்பாளையம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானி ஆற்றங் கரையோரத்தில் சமயபுரம் பகுதியில் கொட்டி வருகின்றனர்.

இதனால், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் இந்த கழிவுகளை கால்நடைகள் மற்றும் பவானி ஆற்றில் நீர் அருந்த வரும் யானைகள், காட்டெருமைகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உண்டு வருகின்றன.

இந்நிலையில் சமயபுரத்தைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் வளர்த்து வந்த சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பசு மாடு ஒன்று, இந்த கழிவுகளை தின்றதால் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பசு ஈன்ற இரண்டு மாதமே ஆன கன்று குட்டி, தாயின் உடலை பார்த்து கதறுவது, பார்ப்பவர்கள் நெஞ்சை பிழிவதாக உள்ளது.

இந்த கழிவுகளுடன் ஏராளமான நெகிழி காகிதங்களும் கலந்து இருப்பதால் இதை உண்ணும் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதுடன், மனிதர்களுக்கும் தொற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கொடுத்து குறித்து கிழங்கு மண்டி உரிமையாளர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பசுமாடு உயிரிழந்தது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே காவல்துறையும் அரசு அதிகாரிகளும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் உருளைக்கிழங்கு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu