தொகுதி பக்கம் எம்.பி வரதே கிடையாது… எம்பி முன்னிலையில் எம்எல்ஏ பேச்சால் மோதல்… திமுக கூட்டத்தில் தள்ளு முள்ளு!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2023, 8:06 pm

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மதுக்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தஞ்சை பாராளுமன்ற தொகுதி எம்பி பழனிமாணிக்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பேராவூரணி தொகுதி எம்எல்ஏ அசோக்குமார் பேசுகையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருந்தும் எந்த பலனும் அடையவில்லை.

மாறாக கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மட்டுமே அதற்கான பலன்களை அடைந்து வருகின்றனர். அடிமட்ட தொண்டர்களை மேல்மட்ட நிர்வாகிகள் மதிப்பதில்லை.


அமைச்சர் எங்கள் பகுதிக்கு வரும்போது ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்று விடுகிறார். இதனால் அடிமட்ட தொண்டர்களின் கோரிக்கைகள் மற்றும் நிலைகளை எடுத்து அமைச்சர்களிடம் சொல்ல முடியவில்லை.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் எங்கள் பகுதிக்கு வருவதே இல்லை என்று ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து எம்எல்ஏவின் பேச்சை கண்டித்து ஒரு தரப்பினர் சத்தம் போட மறுதரப்பினர் எம் எல் ஏ வின் பேச்சுக்கு ஆதரவாக அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட கூட்டத்தில் இரு தரப்பு திமுக தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை அடுத்து எம்பி பழனிமாணிக்கம் அவர்களை அமைதியாக அமரும்படி கேட்டுக் கொண்டும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு நீண்ட நேரம் நீடித்தது.

இதனால் கூட்டம் திருப்தி பெறாமல் முடிவுற்றது. திமுக கூட்டத்தில் தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Rashmika Mandanna ராஷ்மிகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசுக்கு சமூக அமைப்பு பரபரப்பு கடிதம்!