எம்.சாண்ட், ஜல்லியின் விலை மீண்டும் உயர்வு… விரைவில் 50% குவாரிகள் மூடப்படும் அபாயம் ; எச்சரிக்கும் குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர் சங்கம்
Author: Babu Lakshmanan26 ஜனவரி 2024, 3:16 மணி
ஜல்லி எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் அடிக்கடி விலை உயர்வதற்கு குவாரிகளின் உற்பத்திக்கான அனுமதியை தமிழக அரசு அதிகரித்துத் தர மறுப்பதே காரணம் என்று குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திர பிரகாஷ் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில், கட்டுமானத் துறை அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதனால், கட்டுமானப் பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் ஆகியவற்றின் தேவையும் மிக அதிகமாகவுள்ளது. தேவை அதிகரிக்க அதிகரிக்க, கடந்த இரண்டு மாதங்களுக்குள் இவற்றின் விலை, 2 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து, கோவை மாவட்ட குவாரிகள் மற்றும் கிரசர்கள் சங்கத் தலைவரும், கேசிபி நிறுவனத்தின் தலைவருமான சந்திரபிரகாஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:-வரும் பிப் 1 லிருந்து ப்ளூ மெட்டல், எம்.சாண்ட், பி.சாண்ட் 10 சதவீதம் விலை உயர்த்தப்படுகிறது. உற்பத்திக் குறைவே, இதற்குக் காரணம். என்னுடைய கிரசரில் மணிக்கு 400 டன் உற்பத்தி செய்ய முடியும்; ஆனால் 100 டன் அதாவது 25 சதவீதம் உற்பத்தி செய்யவே அரசு அனுமதிக்கிறது. எனக்கு நான்கு மாநிலங்களில் கிரசர் இருக்கிறது; ஆனால் வேறு எந்த மாநிலத்திலும் இந்தக் கட்டுப்பாடு கிடையாது.
இது மாநில அரசின் தவறில்லை; கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு, தொலைநோக்கு இல்லை. மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல, இங்கும் அனுமதி வழங்க வேண்டுமென்று கோரினோம். ஆனால் அவர்கள் அங்கு போய்ப் பார்த்து விட்டு வந்து, உற்பத்திக்கான அனுமதியை அதிகரிக்காமல், ‘ராயல்டி’ தொகையை இரட்டிப்பாக்கி விட்டார்கள்.
இதைச்செலுத்த நாங்கள் தயார். ஆனால் உற்பத்திக்கான அனுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியம். இப்போது நான்கில் ஒரு பங்கு மட்டுமே உற்பத்தி செய்வதோடு, ‘ராயல்டி’ தொகையை இரு மடங்கு செலுத்த வேண்டியுள்ளது; மின் கட்டணம், தொழிலாளர் பற்றாக்குறை, ஜி.எஸ்.டி., அனைத்துமே அதிகரித்துள்ளது. அதனால் தான், விலையை உயர்த்த வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி அளவை அதிகரித்தால் விலை பல மடங்கு குறைய வாய்ப்புள்ளது. ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வரை தொழில் செய்யும் எங்களைப் போன்ற சிறு, குறு தொழில் முனைவோரை, தமிழக ஜி.எஸ்.டி., அதிகாரிகள், எதிரிகளாகப் பார்க்கின்றனர். ஜி.எஸ்.டி., அதிகாரிகளின் போக்கைக் கண்டித்து, தமிழகம் தழுவிய போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இதே நிலை, நீடித்தால், தமிழகத்தில் 50 சதவீத குவாரிகள் விரைவில் மூடப்படும். அதுமட்டுமில்லாமல் தென்னாப்ரிக்காவில் இருந்து ஜல்லிகளை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும்.
இத்தொழிலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, அரசு அமைத்துள்ள கமிட்டியில் சங்க பிரதிநிதிகளின் கருத்தையும் கேட்க வேண்டும். குவாரி, கிரசர்களின் உற்பத்திக்கான அனுமதியை அதிகரிப்பதே ஒரே தீர்வு. அப்படிக் கொடுத்தால், இப்போது இருப்பதை விட, 30 சதவீதம் வரை, ஜல்லி, எம்.சாண்ட். பி.சாண்ட் விலையைக் குறைக்க முடியும், எனக் கூறினார்.
0
0