முக்கொம்பு அணைக்கு 2 லட்சம் கனஅடி நீர் வருகை ; 250 ஏக்கர் வாழை சேதம்.. பொதுமக்கள் முகாம்களில் தங்கவைப்பு
Author: Babu Lakshmanan5 August 2022, 1:43 pm
திருச்சி : முக்கொம்பு அணைக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 250 ஏக்கர் வாழை மரங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாகவும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காரணமாகவும் முக்கொம்பு அணைக்கு சுமார் வினாடிக்கு 2.5 லட்சம் கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
வினாடிக்கு கொள்ளிடம் ஆற்று பகுதியில் 1.3 லட்சம் கன அடியும், காவிரி பகுதிக்கு நொடிக்கு 66.39 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதி மற்றும் காவிரி கரையோர பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கொள்ளிடம் ஆறு பகுதியான திரு வளர்ச்சோலை மற்றும் உத்தமர்சீலியில்
தரைப்பால மூலமாக தண்ணீர் கடந்து அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்றதால், அங்கு பயிரிடப்பட்டுள்ள சுமார் 250 ஏக்கர் வாழை நீரில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆலங்குடி மகாஜனம் ஊராட்சிக்குட்பட்ட கே.வி.பேட்டை, திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் பகுதியில் உள்ள பிச்சாண்டார் கோவில், வாழவந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக, தண்ணீர் மிகுந்து செல்வதையடுத்து, அப்பகுதியில் உள்ள சர்ச், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இம்மக்களுக்கு உணவினை வழங்கிட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் இருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என காவிரி ஆற்றுக்கு குளிக்கவும் துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரித்துள்ளார்.
மேலும் இப்பகுதி முழுவதும் பேரிடர் பாதுகாப்பு குழுவினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவில் மாவட்ட ஆட்சி பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் கொள்ளிடம் முக்கொம்பு காவிரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.