கல்நெஞ்சம் கொண்ட திமுக அரசாங்கம்… முல்லைப்பெரியாறு விவகாரத்தில் வாய் திறக்க CM ஸ்டாலின் மறுப்பது ஏன்..? ஆர்பி உதயகுமார் கேள்வி

Author: Babu Lakshmanan
24 November 2023, 11:27 am

முல்லைப் பெரியாறு உரிமை என்பது விவசாயிகளின் அட்சய பாத்திரம் அதை திமுக அரசு அலட்சியமாக கையாண்டு வருகிறது என்றும், கேரளா அரசின் அழுத்தத்திற்காகவும், கூட்டணி தர்மத்திற்காகவும் முதலமைச்சர் மௌனமாக இருப்பது மௌனம் ஏன்? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- முல்லைப் பெரியாறு இது வெறும் வார்த்தை அல்ல, தென் தமிழ் நாட்டு மக்களுடைய ஜீவாதார உரிமை, ஜீவாதார பிரச்சனையாகும்.மதுரை, தேனி, திண்டுக்கல்,சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 7 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கும், 80 லட்சம் மக்கள் குடிநீராக நம்பி உள்ளனர். 

1979க்கு முன்னர் நமது பாசனப்பரப்பு 2.31 லட்சம் ஏக்கர் இருந்தது. அணை நீர்மட்டத்தை 136 அடியாக குறைந்த பின்பு1.71  லட்சமாக குறைந்துவிட்டது. இது கேரள மாநிலத்தினுடைய அழுத்தம் காரணமாக என்று கூறப்பட்டாலும் கூட, பாசன பரப்பு நமக்கு குறைந்தது தான் நமக்கு வேதனை அளிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவி அம்மா ஒரு நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி கண்டார்.

20.11.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் அணையின் நீரை உடனடியாக 142 அடியாக தேக்கி கொள்ளலாம் என்றும் பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்கிற தீர்ப்பை பெற்றுக் கொடுத்து, தொடர்ந்து 7.12.2015 முதல் அதைத் தொடர்ந்து 15. 10.2018 ஆகிய மூன்று முறை 142 அடியாக நீரை உயர்த்தி  அணை மிகவும் பாதுகாப்பாகவும், பலமாகவும் இருப்பதை நாம் உலகத்திற்கு உணர்த்துகின்ற வகையிலே அந்த நிகழ்வு நடந்தது.

தற்போது முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது வரை 134.90 அடியாக உள்ளது. தற்போது நீர்வரத்து வினாடிக்கு 4,117.64 கன அடி உள்ளது. அதேபோல் நீர் வெளியேற்றம் வினாடிக்கு ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது விரைவில் 136 அடியாக எட்டும் நிலையில் உள்ளது. முல்லைப் பெரியாரின் 152 அடியாக உயர்த்தது என்பது நம்முடைய கனவு, ஆனால் 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கையை பாசன விவசாய சங்கங்கள் தொடர்ந்து இந்த அரசை இன்றைக்கு வலியுறுத்தி வருகின்றார்கள்.

ஆகவே நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கிற போது தண்ணீரை தேக்கி வைத்து முறையாக பராமரித்து 142 அடியாக உயர்த்துகிற போது இந்த ஐந்து மாவட்ட மக்களுடைய குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் இது முழுமையாக பயன்படும் என்பதை எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல்  முல்லைப் பெரியாறு குறித்து இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின்  வாய் திறக்கவே மறுக்கிறார். அதனுடைய மர்மம் என்ன? என்று நமக்கு தெரியவில்லை.

பாசனப்பகுதிகளுக்கு தேவையான நீரை சேமித்து வைப்பதற்காகத்தான் இந்த அணையை கர்னல் ஜான்பென்னிகுவிக் கட்டினார்.
கேரளா அரசின் அழுத்தம் காரணமாக அடிபணிந்துமௌனமாக இருப்பது கூட்டணி தர்மத்திற்காகவா? தனிப்பட்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மௌனமாக இருக்கலாம், திமுக கட்சி தலைவராக இருந்து கொண்டு மௌனமாக இருக்கலாம் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் இந்த நாட்டினுடைய முதலமைச்சராக இருந்து கொண்டு நீங்கள் மௌனம் காப்பது தான் விவசாயிகளுக்கு வேதனையை அளிக்கிறது.

இன்றைக்கு மழை பொழிந்து கொண்டிருக்கிறது, நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது, நீர் பிடிப்பு பகுதிகளிலே மழை நமக்கு கிடைக்கக்கூடிய இந்த காலகட்டத்திலே, நாம் அதை சேமித்து 142 அடியாக உயர்த்தி விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கவேண்டும். 
தென் மாவட்டங்களின் முக்கிய பிரச்சினையான முல்லைப் பெரியாறு என்றால் முதலமைச்சருக்கு வேப்பங்காய் போல் கசக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்திற்காக  நீரை திறந்து விடுவதற்கு கூட கருணை இல்லாத கல் நெஞ்சம் படைத்த அரசாங்கமாக, இந்த திமுக அரசு இருக்கிறது, தொடர்ந்து இந்த கல்நெஞ்சம் படைத்து இதுபோன்ற சர்வாதிகாரப் போக்கிலே செயல்பட்டு,  விவசாயினுடைய கோரிக்கை கேட்பதற்கு முன்வராமல் காலம் தாழ்த்தினால் இந்த அரசுக்கு தகுந்த பாடத்தை இந்த மக்கள் புட்டுவார்கள்.

முல்லை பெரியாரின் பிரச்சனைக்காக 5 மாவட்டங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை எடப்பாடியார் நடத்தி காட்டினார். இரு மாநில உறவுகள் என்பது முக்கியம் ஆனால் உறவை காப்பதில் உரிமையை விட்டுக் கொடுத்தால் விவசாயிகள் எங்கே போவார்கள்.
இந்த முல்லைப் பெரியாறு உரிமையை போற்றி பாதுகாக்க வேண்டும் முல்லை பெரியார் என்பது அட்சயபாத்திரம் பாத்திரம் அதை அலட்சியமாக கையாண்டு வருகிறது திமுக அரசு.

ஸ்டாலின் முல்லைப் பெரியாரில் 142 அடியாக நீரை தேக்காமல் தவறவிட்டால் வருகின்ற காலங்களில் விவசாயிகள் தகுந்த பாடத்தை திமுகவிற்கு புகட்டுவார்கள், என கூறினார்.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!