ரூ.13 ஆயிரம் சம்பளத்தில் பிரமாண்ட வாழ்க்கை.. லக்கி பாஸ்கருக்கே டஃப் கொடுத்த மும்பை மேன்!
Author: Hariharasudhan28 December 2024, 12:57 pm
ரூ.13 ஆயிரம் ஊதியத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஒப்பந்த ஊழியரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு விளையாட்டு வளாகத்தில் ஹர்ஷல் குமார் என்பவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு பெண்ணையும் காதலித்து வந்து உள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா ஹர்ஷல் விளையாட்டு வளாகத்தின் பழைய லெட்டர்ஹெட்டை கண்டுபிடித்து உள்ளார்.
இதனை வைத்து ஒரு பலே திட்டம் போட்ட ஹர்ஷல் குமார், அந்த லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்தி வங்கிக்கு மெயில் அனுப்பி உள்ளார். அந்த மெயிலில், விளையாட்டு வளாகத்தின் கணக்குடன் இணைக்கப்பட்ட இமெயில் முகவரியை மாற்றுமாறு கோரிக்கை வைத்து உள்ளார்.
இதன்படி, விளையாட்டு வளாகத்தின் கணக்கைப் போன்ற முகவரியுடன் புதிய இமெயிலை உருவாக்கி உள்ளார். அதில் ஒரே ஒரு எழுத்துக்கள் மட்டுமே மாற்றப்பட்டு உள்ளன. பின்னர், இந்த புதிய மின்னஞ்சல் முகவரியை விளையாட்டு வளாகத்தின் வங்கிக் கணக்குடன் இணைத்து உள்ளார்.
இதனையடுத்து, அந்த கணக்கில் இண்டர்நெட் பேங்கிங் வசதியையும் ஹர்ஷல் குமார் செயல்படுத்தி உள்ளார். அதன் பின்னர், கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை மொத்தல் 13 வங்கிக் கணக்குகளில் ரூ.21.6 கோடி வரை பணப் பரிமாற்றம் செய்துள்ளார்.
இந்தப் பணத்தில், ரூ.1.2 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார், ரூ.1.3 கோடி மதிப்புள்ள எஸ்யூவி கார், ரூ.32 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ பைக், அது மட்டுமல்லாது, தனது அன்பு காதலிக்காக சத்ரபதி சம்பாஜிநகர் விமான நிலையத்திற்கு அருகில் 4 BHK பிளாட் வாங்கிய ஹர்ஷல், வைரம் பதித்த ஒரு ஜோடி கண்ணாடியையும் ஆர்டர் செய்து உள்ளார்.
இதையும் படிங்க: ‘என் கள்ளக்காதலியோட நீ எப்படி இருக்கலாம்?’.. நண்பன் கொலை!
ஆனால், ஹர்ஷல் இவ்வாறு திடீரென பணக்காரன் ஆனதால், அவருடன் பணிபுரிந்த சக பணியாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு சக ஊழியர்கள் தகவல் அளித்து உள்ளனர். இதன்படி, விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவர் ஹர்ஷலைக் கண்காணித்து உள்ளார்.
அப்போது தான், புதிதாக வங்கிக் கணக்கு ஒன்றை திறந்து, அரசு நிதியை தனது அக்கவுண்ட்டில் மாற்றி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ஹர்ஷல் மற்றும் அவரது உறவினர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.