நண்பருடன் வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்த ரவுடி படுகொலை : நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2022, 1:40 pm

புதுச்சேரியில் நண்பருடன் வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்த ரவுடி முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு நண்பர் சக்தி (வயது 20) என்பவருடன் தனது வீட்டில் மது அருந்திகொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், மோட்டார் சைக்கிள்களில் திடீரென்று ஒரு கும்பல் பன்னீர்செல்வம் வீட்டுக்குள் புகுந்தனர்.

அவர்களை பார்த்ததும் பன்னீர்செல்வமும், சக்தியும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் 2 நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது அந்த கும்பல் வீசியது. தொடர்ந்து பன்னீர்செல்வம், அவரது கூட்டாளி சக்தி ஆகியோரை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பியோடினர்.

இதனையடுத்து வெடி சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து இருவரையும் மீட்டு கதிர்காமம் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதித்த நிலையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் உயிரிழந்தார்.

அவரது கூட்டாளியான சக்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக தன்வந்திரி நகர் காவல்நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதனிடையே பன்னீர்செல்வம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த ஜாண்டி என்கிற செந்தில் (வயது 25) என்பவர் உட்பட 7 பேரை போலிசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஜெயபால் என்பவர் கொலை செய்யப்பட்டதற்க்கு பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 2587

    0

    0