2 குழந்தைகளுடன் இளம்பெண் கொலை : கணவனா? கள்ளக்காதலனா? காரணம் குறித்து போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan23 May 2022, 6:42 pm
திருப்பூர் : 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பாலாஜி நகர் பகுதியில் வாடகை வீட்டில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரி (வயது 35) மற்றும் அவரது மகன்கள் தர்னிஷ் (வயது 9), நித்திஷ் (வயது 4) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இதில் முத்துமாரி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் முத்துமாரி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, பாலாஜி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
மேலும் அவருக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது.
இந்த பகுதியில் முத்துமாரி அந்த நபருடன் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை முத்துமாரியின் வீடு நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை அழைத்துள்ளனர். ஆனால் உள்ளிருந்து முத்துமாரி பதில் குரல் எழுப்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் முத்துமாரி மற்றும் அவரது மகன்கள் என 3 பேரும் பிணமாக கிடந்துள்ளனர்.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்த தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு வந்தார். அவர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வெற்றி வரவழைக்கப்பட்டு இருந்தது. மோப்ப நாய் அந்த பகுதியில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:- திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்து மாரி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்தப் பகுதியில் புதியதாக குடியேறியுள்ளார்.
அவருடன் வந்த நபர் தாங்கள் கணவன் மனைவி என கூறி வாடகைக்கு வீடு எடுத்து உள்ளனர். ஆனால் முத்துமாரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து கள்ளக்காதலனோடு தான் இந்த பகுதியில் குடியேறியுள்ளார்.
இவர்கள் சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதிக்கு வந்ததால் அவர்கள் குறித்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதனால் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். இந்தக் கொலையை முத்துமாரியின் கணவர் செய்தாரா? அல்லது முத்துமாரி உடன் இங்கு வசித்து வந்த கள்ளக்காதலன் செய்தாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் கொலையில் ஈடுபட்டுள்ளது அவரது கள்ளக்காதலான என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.