வீட்டு உரிமையாளரை கொலை செய்து நகைகள், கார் அபேஸ்.. காவலாளி வேடத்தில் வந்த தம்பதி!!!
Author: Udayachandran RadhaKrishnan24 October 2023, 11:56 am
வீட்டு உரிமையாளரை கொலை செய்து நகைகள், கார் அபேஸ்.. காவலாளி வேடத்தில் வந்த தம்பதி!!!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மதுரைச் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அறக்கட்டளை மூலம் ஒரு மருத்துவமனை தொடங்கினார்.
பின்னர் அந்த மருத்துவமனையை அருள் முதியோர் இல்லமாக நடத்தி வந்தார். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. மேலும் இவர் சிறுவர்கள் அனாதை இல்லமும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வத்தலகுண்டில் உள்ள முதியோர் இல்லத்தை பாதுகாப்பதற்கு காவலாளி வேண்டுமென நாளிதழில் விளம்பரம் செய்ததை அடுத்து காவலாளி வேலைக்காக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சேசுராஜா (40) என்பவரை கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி தேர்வு செய்து வேலைக்கு சேர்த்துள்ளார்.
பத்மா மனைவியுடன் அந்த வீட்டில் குடியமர்ந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செல்வராஜ் தனது மனைவி ஜாய் களஞ்சியம் (55) என்பவருடன் வத்தலகுண்டு முதியோர் இல்லத்திற்கு வந்தார்.
பின்னர் செல்வராஜ் தலைமை அலுவலகத்திற்கு சென்னை திரும்பினார். மனைவி ஜாய் களஞ்சியம் வத்தலகுண்டுவில் உள்ள அந்த இல்லத்தில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதியோர் இல்லத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஓடி சென்று பார்த்தபோது, ஜாய் களஞ்சியம், தனது பெட்ரூமில் ரத்த காயத்துடன், தலையில் மற்றும் கழுத்தில் அருவாளால் வெட்டுப்பட்டு துடிதுடித்துக் கொண்டு உயிருக்கு போராடி கிடந்தார்.
அருகில் அருவாள் மற்றும் செருப்பு ஆகியவை ரத்தங்களுடன் கிடந்தது. வெட்டிய காவலாளி களஞ்சியம் காதில் அணிந்து இருந்த 2 கிராம் தங்கத்தோடு தாலி செயின், வீட்டில் விலை உயர்ந்த ஒரு செல் போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு செல்வராஜ்க்கு சொந்தமான சிப்ட் காரையும் எடுத்துக்கொண்டு மனைவியுடன் காவலாளி சேசுராஜா தப்பி ஓடி விட்டார்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜாய் களஞ்சியத்தை தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காவலாளியை தேடி வந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜாய்களஞ்சியம் மரணமடைந்தார். காவலாளியை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஜாய் களஞ்சியத்தை அருவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம்? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் காரை எடுத்து தப்பி ஓடிய கொலையாளி திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் அந்த காரை நிறுத்தி விட்டு சென்றதால் தனிப்படை காவல்துறையினர் அந்த காரை கைப்பற்றினர்.
மேலும் தனிப்படை காவல்துறையினர் கொலையாளி சேசுராஜாவையும், அவரது மனைவி பத்மாவையும், சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அவர்களை கைது செய்து வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. சேசு ராஜா ஒரு இடத்திற்கு வேலைக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் பணத்தை திருடி செல்வதில் சேசு ராஜா தொழிலாகவே செய்து வந்துள்ளார்.
அந்த நேரத்தில் நாளிதழில் விளம்பரத்தை பார்த்த கொலையாளி வழக்கமாக தனது கைவரிசையை காட்டியுள்ளார். அப்போது ஜாய் களஞ்சியம் அணிந்திருந்த தோடு புடுங்கும்போது தடுத்த ஜாய்களஞ்சியத்தை அங்கு இருந்த அருவாளால் சேசு ராஜா மற்றும் அவரது மனைவி பத்மா இருவரும் சேர்ந்து தலை கழுத்து பகுதியில் பலமாக வெட்டி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
மேலும் காதில் அணிந்திருந்த இரண்டு கிராம் தோடு மற்றும் விலை உயர்ந்த செல்போன் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.