திருச்செந்தூரில் படையெடுத்த முருக பக்தர்கள்… விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம் : காவடி எடுத்து நேர்த்திக்கடன்!
Author: Udayachandran RadhaKrishnan25 January 2024, 1:06 pm
திருச்செந்தூரில் படையெடுத்த முருக பக்தர்கள்… விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம் : காவடி எடுத்து நேர்த்திக்கடன்!
தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக சிறப்பு பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தைப்பூசதிருவிழாவை யொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக அருப்புக்கோட்டை ராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை குமரி தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் காவடி எடுத்து அழகு குத்தி பாதயாத்திரை ஆக வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் அனைவரும் தற்போது கோவில் கடலில் புனித நீராடி அழகு குத்தியும் அங்க பிரதட்சணம் செய்தும் காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இன்று நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்காக அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு அஸ்திரதேவர் தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. அதன் பிறகு பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் தரிசனம் செய்ய தொடங்குவார்கள்
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை,நடைபெறுகிறது. அதன் பின்னர் சுவாமி அலைவாய்குகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்கு செல்கிறார்.அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபராதனை நடைபெறுகிறது.
தொடா்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சோ்கிறாா்.
தைப்பூசத் திருவிழாவிற்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கடலில் புனித நீராடக் கூடிய பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக தடுப்பு மிதவை வேலிகள் அமைக்கப்பட்டு கடல் பாதுகாப்பு குழுவினர்கள், தீயணைப்புத் துறையினரகள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் தைப்பூசத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குவிந்துள்ளதால் திருச்செந்தூர் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
0
0