என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன..90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தியேட்டர் உதயம் மூடல்.. கவிஞர் வைரமுத்து வருத்தம்!
Author: Udayachandran RadhaKrishnan15 February 2024, 10:50 am
என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன..90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தியேட்டர் உதயம் மூடல்.. கவிஞர் வைரமுத்து வருத்தம்!
1990களில் ரசிகர்களின் கொண்டாட்ட தலமாக இருந்த திரையரங்குகள் என சொன்னாலே அவை உதயம், தேவி, கமலா, ரோகிணி உள்ளிட்டவைதான். இவை சென்னையின் அடையாளங்களாகவும் இருந்தன. அசோக் நகரில் இயங்கி வரும் உதயம் தியேட்டரில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரைகள் இயங்கி வந்தன.
கடந்த சில ஆண்டுகளாக அந்த திரையரங்கிற்கு ரசிகர்களின் வருகை குறைந்துவிட்டது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வந்துவிட்டதால் பழைய தியேட்டர்களுக்கு வருவதை பெரும்பாலானோர் விரும்பவில்லை. இதனால் உதயம் திரையரங்கு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது.
இதற்கான ஒப்பந்தம் 10 நாட்களுக்கு முன்பு கையெழுத்தானது. உதயம் திரையரங்கு இருக்கும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்படவுள்ளது. ஏற்கெனவே சாந்தி தியேட்டரும் மூடப்பட்டு அந்த இடத்தில் வேறு கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது உதயம் தியேட்டர் மூடுவது 70ஸ், 80ஸ் கிட்ஸ்களின் மனதை வலிக்க செய்கிறது.
இது குறித்து கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது X தளப்பக்கத்தில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதில் ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;
இதயம் கிறீச்சிடுகிறது
முதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை
வெளியிட்ட உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றன
மாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு
எதுவும் தப்ப முடியாது என்று
மூளை முன்மொழிவதை
இதயம் வழிமொழிய மறுக்கிறது
இனி
அந்தக் காலத் தடயத்தைக்
கடக்கும் போதெல்லாம்
வாழ்ந்த வீட்டை விற்றவனின்
பரம்பரைக் கவலையோடு
என் கார் நகரும்
நன்றி உதயம் என அவர் பதிவிட்டுள்ளார்.