சோளத்தட்டு அறுக்கச் சென்றவர்களை தாக்கிய மர்மவிலங்கு: ஆயுதங்களுடன் வயலைச் சுற்றி வளைத்த பொதுமக்கள்…வனத்துறை ட்ரோனில் கண்காணிப்பு..!!
Author: Rajesh24 January 2022, 3:43 pm
திருப்பூர்: அவிநாசி அருகே சோளத்தட்டு அறுக்கச் சென்ற 2 பேர் மர்ம விலங்கு தாக்கியதால் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பாப்பாங்குளம் பகுதியில் வரதராஜன் என்பவரது தோட்டத்தில் சோளத்தட்டு அறுவடை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தோட்டத்தில் இருந்த மர்ம விலங்கு ஒன்று திடீரென தோட்டத்தின் உரிமையாளர் வரதராஜன் மற்றும் அவரது உதவியாளர் மாறன் ஆகிய இருவரை தாக்கியுள்ளது.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு உடனடியாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினருக்கும், வனத்துறைக்கும் தகவல் அளித்தனர். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் புலியோ, சிறுத்தையோ தாக்கியதாக தெரிவித்ததை அடுத்து வனத்துறையினர் , தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வனத்துறையினர் விசாரணையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகப்படுவதாக தெரிவித்ததையடுத்து மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் தற்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . மேலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை அனுமதிக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், சம்பவம் நடந்த சோளக்காட்டை சுற்றி சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கம்பு, தடி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சோளக் காட்டை சூழ்ந்துள்ளனர்.