காதலை ஏற்க மறுத்த இளம்பெண் மர்மமரணம் : திருமணமான வாலிபரிடம் விசாரணை…உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 10:08 pm

கரூர் : குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உரிய நீதி கேட்டு தாய் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கொம்பாடிபட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி செல்வி இவருக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இவரின் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் இவரின் இரண்டாவது மகள் சுவேதா (வயது 26). திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில் பில்லாபளையம் பகுதியை சேர்ந்த குழுவாளி (எ) சண்முக பிரியன் என்பவர் ஏற்கனவே திருமணம் செய்து குழந்தைகள் உள்ளநிலையில், சுவேதாவை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக செல்வி யிடம் அடிக்கடி பிரச்சனை செய்து வந்துள்ளார்.

உனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இது சரியில்லை என செல்வி கண்டித்துள்ளார். இனிமேல் மகளை பின் தொடர வேண்டாம் என சொல்லியதாகவும், அதற்கு மகளை தரவில்லை எனில் கொலை செய்து விடுவேன் என சண்முகம் பிரியன் சொல்லியதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் நேற்று (13ந்தேதி) செல்வி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது, அங்கு வந்த குழுவாளி (எ) சண்முக பிரியன் மற்றும் அவரின் தாயார் இருவரும் உனது மகள் எங்கள் உறவினர் ரமேஷ் என்பவரின் வீட்டில் தூக்கு மாட்டி இறந்து விட்டார் என கூறியுள்ளனர்.

அதைக் கேட்டவுடன் செல்வி மற்றும் அவரின் தங்கை கணவர் இளையராஜாவுடன் நேரில் சென்று பார்த்த போது, அங்கு உயிரற்ற சடலமாக மகள் படுத்திருந்த நிலையில் கிடந்துள்ளார். அப்போது செல்வி கேட்டபோது உனது மகள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

அதனையடுத்து தகவலின்பேரில் லாலாபேட்டை போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்கும் வரை உடலை திரும்ப பெற மாட்டோம் என உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பிறகு மருத்துவமனை வாயில் முன்பு அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சந்தேகமாக கூறிய நபரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மருத்துவ சான்றிதழ் வந்தபிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென டிஎஸ்பி கூறியதை அடுத்து அனைவரும் பேச்சு வார்த்தைக்கு கட்டுப்பட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அரசு மருத்துவமனை பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது

  • dhanush aishwarya court decision முடிவுக்கு வந்த தனுஷ்-ஐஸ்வர்யா பிரச்சனை…அதிரடி தீர்ப்பை அறிவித்த கோர்ட்..!
  • Views: - 799

    0

    0