சவாரிக்கு சென்ற டாக்சி டிரைவர் மர்மமான முறையில் மரணம் : சவாரிக்கு அழைத்த மர்ம நபர் யார் ? போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan9 February 2022, 6:57 pm
கோவை: கோவையில் சவாரிக்கு சென்ற டாக்சி டிரைவர் மர்மமான மமுறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே ஓணம்பாளையம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் தொண்டாமுத்தூர் ஒணம்பாளையம் சாலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். இன்று வழக்கம் போல பகுதி மக்கள் காலையில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தொண்டாமுத்தூர் வீட்டில் தனியார் தங்கும் விடுதி அருகே கார் ஒன்று ஆட்கள் யாரும் இன்றி வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது. சந்தேகமடைந்த நடை பயிற்சி சென்றவர்கள் அருகே சென்று பார்த்தபோது காருக்குப் பின்னால் சாலையோரமாக வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பேரூர் டிஎஸ்பி திருமால், வடவள்ளி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பின்னர் அங்கு கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.
யார் என்பதை அறிய காரில் ஏதாவது தடையம் இருந்ததா எனத் தேடிப் பார்த்தனர். அப்போது அவரது உடல் அருகே டிரைவிங் லைசென்ஸ் கிடந்தது. அதனைக் கைப்பற்றி பார்த்தபோது அதில் சாணு பெயர் இருந்தது.
இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்த வாலிபர் வெள்ளலூர் மகாலிங்கபுரத்தில் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரின் மகன் சாணு (வயது 31) என்பதும் கால் டாக்சி டிரைவராக இருந்ததும் தெரியவந்தது.
நேற்று மாலை சாணு செல்போனுக்கு போன் செய்த மர்ம நபர் அவரை சவாரிக்கு வருமாறு கூறினர். அவரும் காரை எடுத்துக்கொண்டு ஒனம்பாளையம் பகுதிக்கு செல்கிறார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை .
இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சானு 2 செல்போன்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கார் முழுவதும் தேடிப் பார்த்தும் செல்போன் கிடைக்கவில்லை. அவரை சவாரிக்கு அழைப்பதுபோல் வரவழைத்து கொலை செய்துவிட்டு செல்போன்களை எடுத்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் சாமிக்கு செல்போன் தொடர்பு கொண்ட நபர் யார் என்பதை அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.