நள்ளிரவில் கதவை தட்டிய மர்மநபர்கள்… பயந்து நடுங்கிய பாஜக பிரமுகர் : அதிகாலையில் டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan21 March 2025, 1:31 pm
ஓசூரில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் கதவை தட்டி 10 நிமிடங்கள் அங்கேயே சுற்றி வீட்டில் இருந்தவர்களை அச்சமடைய செய்துள்ளனர்.
ஓசூர் தேர் பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ் (53) இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜகவின் முன்னாள் தலைவராக பதவியில் இருந்தார். பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.
இவரது மனைவி பார்வதி ஓசூர் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நாகராஜ் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு சுமார் 2.40 மணியளவில் அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் முன்பக்க கேட்டை திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்.

பின்னர் தரைத்தளத்தில் இருந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் இருவரும் அதிவேகமாக தட்டி உள்ளனர். வீட்டின் கதவை பலத்த சத்தத்துடன் மர்ம நபர்கள் தட்டுவதை அறிந்த நாகராஜின் மனைவி பார்வதி மற்றும் அவரது வீட்டில் இருந்த மருமகள்கள், பேரக்குழந்தைகள் மாமியார் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் முன்பக்க கதவில் அமைக்கப்பட்டிருந்த லென்ஸ் வழியாக வெளியில் நின்ற மர்ம நபர்களை பார்த்த அவர்கள் வீட்டின் கதவை திறக்காமல் அப்படியே விட்டு விட்டனர். அப்போது அந்த நபர்கள் இருவரும் முதல் தளத்திற்கு சென்று அங்குள்ள வீட்டின் கதவை பலமாக தட்டியுள்ளனர். அந்த வீட்டில் நாகராஜ் படுத்து உறங்கி உள்ளார் அவரும் இந்த சத்தத்தால் எழுந்துள்ளார்.
கீழ் வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினர் அவரை கதவை திறக்க வேண்டாம் என கூறியுள்ளனர். இதனால் யாரும் வீட்டின் கதவை திறக்கவில்லை என தெரிகிறது. வீட்டின் தரைதளம் மற்றும் மேல்புறத்தில் 10 நிமிடங்கள் வரை சுற்றித்திரிந்த அந்த மர்ம நபர்கள் இருவரும் பின்னர் அங்கிருந்து வெளியேறி இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நாகராஜின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பார்த்த போது அதில் இரண்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைவதும் வீட்டின் கதவை தட்டுவதும் கீழ்தளத்திற்கும் மேல் தளத்திற்கும் செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாகராஜ் தலைமையில் ஓசூர் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் கொடுக்க நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்தனர்.
பின்னர் அவர்கள் காவல் நிலையத்திற்குள் சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை வழங்கி மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஓசூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.