ஏரியில் விஷம் கலந்த மர்ம நபர்கள்…செத்து மிதந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்கள்: அதிர்ச்சியில் கிராம மக்கள்..!!
Author: Rajesh26 April 2022, 6:14 pm
திருவாரூர்: மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியில் மர்மநபர்கள் விஷம் கலந்ததால் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்கள் நீரில் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் 95 ஏக்கர் பரப்பளவில் பிடாரி ஏரி அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஏரியை கிராம மக்கள் ஏலம் எடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டு பிரபு என்பவர் 55 ஆயிரம் ரூபாய்க்கு ஏரியை ஏலம் எடுத்து மீன் குஞ்சுகளை வளர்த்து வந்தார். தற்போது மீன்கள் நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் கோடை காலம் என்பதால் இந்த ஏரியில் கரைப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளின் நீர் தேவைக்காக ஏரியில் உள்ள நீரை இரைக்காமல் அடுத்த இரண்டு மாதத்திற்கு பிறகு மீன் பிடித்துகொள்ளலாம் என இருந்துள்ளார்.
இந்நிலையில் பிரபு இன்று காலை ஏரிக்கு வந்து பார்த்தபோது நீரில் மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் நீரின் அடி ஆழத்தில் வசிக்கும் மீன்களும் மயங்கிய நிலையில் கரை ஒதுங்க தொடங்கியது. இதனால் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நாட்டு மீன்கள் இறந்துள்ளது. இதுகுறித்த அறிந்த கிராம மக்கள் ஏரிக்கரையில் திரண்டனர்.
ஏரியில் மீன்கள் செத்து மிதப்பது குறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கிராமப் பகுதி வீட்டிலிருக்கும் இருக்கும் கால்நடைகளை ஏரி பகுதிக்கு மேய்ச்சலுக்கு விடவேண்டாம் என தண்டோரா அடித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த ஏரியை பிரபு என்பவர் ஏலம் எடுக்கும் போது அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக பிரபு தெரிவித்துள்ளார். எனவே மர்ம நபர்கள் சிலர் வேண்டுமென்றே ஏரியில் விஷத்தை கலந்ததால் தான் மீன்கள் உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏரியில் விஷம் கலந்தது யார் என்பது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.