‘ஏன் எங்க ஏரியாவுல அடிக்கடி கரண்ட் கட் ஆவுது’ : லைன் மேனின் மண்டையை உடைத்த மர்மநபர்கள்..7 தையல் போட்ட மருத்துவர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan21 April 2022, 2:30 pm
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகரை சேர்ந்தவர் குப்பன். இவர் மணவாளகர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் மேனாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதே போல கடந்த சில நாட்களாக மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர்.
இதேபோன்று நேற்று இரவு வழக்கம் போல் மணவாளநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு உள்ளது. இதனை அறிந்த மின்வாரிய ஊழியர் குப்பன் அங்கு சென்று சீரமைக்கும் பணியை மேற்கொண்டார்.
அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஏன் இதை சீர் செய்யவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், நாற்காலிகளை சேதப்படுத்தி மின்வாரிய ஊழியர் குப்பனை இருப்பு கம்பியால் தலையில் தாக்கினார்.
இதில் மின்வாரிய ஊழியர் குப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மருத்துவர்கள் குப்பனுக்கு தலையில் 7 தையல் போட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.