மாயமான மாணவி… மரத்தடியில் தாலி கட்டி குடும்பம் : வாலிபர் செய்த செயல்.. திடுக்கிட வைத்த திருச்சி சம்பவம்…!!
Author: Udayachandran RadhaKrishnan9 மார்ச் 2024, 3:58 மணி
மாயமான மாணவி… மரத்தடியில் தாலி கட்டி குடும்பம் : வாலிபர் செய்த செயல்.. திடுக்கிட வைத்த திருச்சி சம்பவம்…!!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருத்தகோடங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் ஸ்ரீநிதி (15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 6 ம் தேதி இரவு வீட்டில் இருந்த ஸ்ரீநிதி திடீரென மாயமான நிலையில் அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் தாய் சித்ரா புத்தாநத்தம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று மாணவியும் வாலிபர் ஒருவரும் கருத்தகோடங்கிப்பட்டியில் உள்ள குமரிகட்டி மலைச்சரிவில் குண்டாங்கல் குன்றில் உள்ள உசிலை மரத்தில் சேலையில் தூக்கிட்டு இருவரும் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை அப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் பார்த்து இதுபற்றி புத்தாநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதை அடுத்து மக்கள் வந்து பார்த்த போது தான் தூக்கில் பிணமாக தொங்கியது ஸ்ரீநிதி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நைனான் என்ற அஜித் (19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து புத்தாநத்தம் போலீசார் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த ஸ்ரீநிதி மற்றும் நைனான் என்ற அஜித் ஆகியோர் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தான் மாணவி காணமல் போனது குறித்து போலீசில் புகார் கொடுத்திருப்பதை அறிந்து இருவரும் துப்பாட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும் இறந்த இடத்தின் அருகே விஷ விதையும் இருந்ததால் அதையும் உட்கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இதற்கிடையில் இறந்த நைனான் என்ற அஜித் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது செல்போனில் ஸ்ரீநிதியை திருமணம் செய்து கொண்டது போல் ஒரு புகைப்படத்தை ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.
அதில் மாணவியின் கழுத்தில் தாலி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் இறப்பதற்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
இருப்பினும் சம்பவம் தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
0
0