பெரியாரின் ஈரோட்டில் எடுபடுமா நாதக? திமுகவே ஒப்புக்கொண்ட இருமுனைப் போட்டி.. சூடுபிடித்த தேர்தல் களம்!
Author: Hariharasudhan17 January 2025, 12:00 pm
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக – நாதக இருமுனைப் போட்டி உருவாகி உள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
ஈரோடு: “சீமானின் பெரியார் குறித்த விமர்சனம், வலதுசாரி சிந்தனை கொண்ட வாக்காளர்கள், இந்து அமைப்புகள் ஆகியவற்றிடம் வரவேற்பு பெற்றுள்ளதால், அவர்களது வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற வாய்ப்புள்ளது. ஒருவகையில், சீமான் வீசும் இந்த பெரியார் அஸ்திரம், பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியைத் தகர்க்கவும் வாய்ப்புள்ளது“ என பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்த அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
பரபரப்பாகிக் கொண்டிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5ஆம் தேதி இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, தேசிய கட்சியான பாஜக மற்றும் பாமக, தேமுதிக, விஜயின் தவெக ஆகியவை தேர்தலில் போட்டி இல்லை என விலகி விட்டன.
இதனால், காங்கிரஸிடம் இருந்து திமுக வசம் ஈரோடு கிழக்கு தொகுதி வந்துவிடும் என்ற எண்ணத்தில், கடந்த மாதம் சென்னையில் நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எங்களுக்கு எதிரிகளே இல்லை என ஆணவத்தில் பேசமாட்டோம்’ என்று குறிப்பிட்டார்.
அதேநேரம், ‘இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், எங்களுக்கு அக்கட்சி போட்டி’ எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால், கடந்த முறை நடந்த தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா 10 ஆயிரத்து 827 வாக்குகள் பெற்று, அப்போது பதிவான வாக்குகளில் 6.37 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
மேலும் தற்போது மாநிலக் கட்சியாகவும் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக சீமானின் பேச்சுகள், குறிப்பாக பெரியார் எதிர்ப்பு பேச்சு, பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: பெற்ற மகளின் ஆபாச வீடியோக்களை விற்ற பெற்றோர்.. அடுத்தடுத்து கைதாகும் புள்ளிகள்!
இருப்பினும், தற்போது களம் காணும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி, 2019 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டதன் மூலம், தொகுதிக்கு நன்கு அறிமுகமாகியிருந்தார். அதேநேரம், திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமாரும் மக்களிடையே நன்கு அறிமுகமானவர் என்பதையும் நாதக நினைவில் வைத்துள்ளது என்றே தெரிகிறது
ஏனென்றால், 30 சதவீதத்துக்கும் மேல் வாக்காளர்களைக் கொண்ட செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரகுமாருக்கு எதிராக, கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சீதாலட்சுமியை தேர்வு செய்திருக்கிறார் சீமான். எனவே, ஈரோடு கிழக்குத் தொகுதியில், அதிமுக, பாஜக, தவெக நம்பிக்கை வாக்குகளை சீமான் கவர்ந்திழுத்தால் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.