நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்துச் சென்று அராஜகம்..! தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்…
Author: Babu Lakshmanan24 January 2022, 1:37 pm
நாகை : நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களிடம் இருந்து பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தில் இருந்து நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மதியம் புஷ்பவனம் கடற்கரையில் இருந்து பன்னீர்செல்வம், நாகமுத்து, ராஜேந்திரன் ஆகிய மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது இரவு 10 மணிக்கு இலங்கை நாட்டை சேர்ந்த கடற்கொள்ளையர்கள், ஒரு படகில் மூன்று நபர்கள் வந்து புஷ்பவனம் மீனவர்களின் படகில் ஒருவர் ஏறி அவர் வைத்திருந்த கம்பால் மீனவர்களை தாக்கியதில் மீனவர் பன்னீர்செல்வம் , நாகமுத்து, இராஜேந்திரன் மூவரும் காயமடைந்தனர்.
மேலும் படகில் வைத்து இருந்த கடலில் விரிக்கப்பட்டிருந்த 300 கிலோ வலை, செல்போன், இன்வெட்டர் பேட்டரி, வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ்., டீசல் 10 லிட்டர் ஆகிய பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். புஷ்பவனம் மீனவர்கள் அருகில் மீன் பிடித்து கொண்டு இருந்த மீனவர்களிடம் டீசல் பெற்றுக் கொண்டு ஆறு காட்டுத்துறை, கடற்கரைக்கு இன்று காலை 4 மணிக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மீனவர் மக்களிடையே பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது