கொட்டி தீர்த்த கனமழை… கடல்போல் காட்சியளிக்கும் வயல்கள்… 25 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நாசம் ; விவசாயிகள் கண்ணீர்…!!!

Author: Babu Lakshmanan
16 November 2023, 11:49 am

நாகையில் கொட்டி தீர்த்த கன மழையால் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிர மடைந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்று முதல் விடாமல் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் அதி தீவிர கன மழை பெய்தது. இதனால் நாகை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது.

நாகை கடைமடை பகுதியில் குறுவை சாகுபடி முழுவதுமாக பொய்த்து போன நிலையில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுப்பட்டு வந்தனர். குறிப்பாக கீழ்வேளூர், பட்டமங்கலம், தேவூர், திருக்கண்ணங்குடி, வடக்காலத்தூர், ராதாமங்கலத்தில் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேரடி விதைப்பு மூலமாக தெளிக்கப்பட்ட சம்பா இளம் பயிர்கள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கி உள்ளது.

அதேபோல், நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலையூர், வடகுடி, தெத்தி, வைரவன்யிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தாளடி, நடவு செய்த சம்பா பயிர்கள், நேரடி விதைப்பில் முளைத்த நெற் பயிர்கள் அனைத்தும் மூழ்கி உள்ளது. தற்போது நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், நாகை, திருமருகல், கீழையூர் ஒன்றியங்களில் சுமார் 25 ஆயிரம் சம்பா இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. பாலையூர் பகுதிகளில் வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் கடல் போல் காட்சியளிக்கிறது.

வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்கு ஒரு வார காலம் ஆகும் என்பதால் மூழ்கி உள்ள பயிர்கள் அனைத்தும் அழுகி போகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் வயல்களில் தேங்கியுள்ள வடிய வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேளாண்மை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 460

    0

    0