முடி வெட்டாததால் பழங்குடியின மாணவனுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு.. குடும்பத்துடன் கல்லூரி முன்பு தர்ணா போராட்டம்!
Author: Babu Lakshmanan30 March 2024, 6:16 pm
தலைமுடியை காரணம் காட்டி நாகையில் பழங்குடியின மாணவனுக்கு 2 நாட்கள் இறுதிதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள மேல வாஞ்சூர் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த சத்யா – முருகேசன் தம்பதியினரின் மகன் அருண்குமார். தந்தை முருகேசன் உயிரிழந்த நிலையில், துப்புரவு பணியாளராக நாகை நகராட்சியில் பணிபுரியும் சத்யாவின் உழைப்பில் அருண்குமார் நாகை ADJ தர்மாம்பால் அரசு உதவிபெறும் கல்லூரியில் EEE இறுதியாண்டு படித்து வருகிறார்.
கல்லூரியில் இறுதியாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் முடி வெட்டவில்லை என்பதை காரணம் காட்டி அருண்குமாருக்கு தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடும் சிரமத்திற்கு மத்தியில் தேர்வு கட்டணம் செலுத்திய நிலையில், இன்று இரண்டாவது நாளாக மாணவனுக்கு தேர்வு எழுத கல்லூரி முதல்வர் செந்தில்குமார் அனுமதி மறுத்ததால் மாணவன் மற்றும் பெற்றோர் கல்லூரி வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவெட்டாத 3 மாணவர்களில் இருவருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், முடி வெட்டிய பிறகும் சாதியை காரணம்காட்டி தனக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாகவும் மாணவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கடும் சிரமத்திற்கு மத்தியில் கல்லூரி கட்டணம் செலுத்தியதாக கண்ணீருடன் கூறிய மாணவனின் தாய் சத்யா, தன் மகனின் படிப்பு வீணாகி விட்டதாகவும், முதல்வரின் சாதிய பாகுபாட்டால் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவனின் உறவினர்கள் கல்லூரி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும், யாரும் மாணவனின் தரப்பை கண்டுக்காமல் அலுவலகத்தின் உள்ளே சென்றனர். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருப்பதுதான் இதற்கு காரணம் என்று கூறியுள்ள உறவினர்கள், அவர், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.