பாலியல் மன்னன் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு ; நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
Author: Babu Lakshmanan14 June 2023, 6:44 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சேர்ந்த பாலியல் மன்னன் காசிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் நெருங்கிப் பழகி, அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், பொறியியல் பட்டதாரி, மாணவி உட்பட பல பெண்கள் புகார் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் காசி மீது போக்சோ, கந்து வட்டி, பாலியல் வல்லுறவு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி, தன்னை காசி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் கூறியதை தொடர்ந்து, அவர் மீது மேலும், ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர்.
இதே போன்று காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்கபாண்டியன் மற்றும் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் காசி மீது வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் ஒரு வழக்கில் இன்று மகளா நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார்.
அதன்படி, இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வைத்து தீர்ப்பளித்தார். மேலும், இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.