நீக்கப்பட்ட 438 வாக்குகளை கள்ள ஓட்டாக போட்ட திமுக…? புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க தயக்கம் : தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர அதிமுக வேட்பாளர் முடிவு

Author: Babu Lakshmanan
10 March 2022, 5:26 pm

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் 438 வாக்குகள் கள்ள வாக்குகளாக பதிவு செய்யப்பட்டது குறித்து அனைத்து ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் மீது வழக்கு தொடர அதிமுக வேட்பாளர் சகாயராஜ் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி நகராட்சியாக இருந்த போது இருந்தே 12 ஆவது வார்டு அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. அந்த வார்டில் அதிமுக நிர்வாகி சகாயராஜ் மக்களின் நம்பிக்கை கொண்ட கவுன்சிலராக இருந்து வந்தார். இதனிடையே, நகராட்சியாக இருந்த நாகர்கோவில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, அதன்படி பல்வேறு பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சியின் 12வது வார்டில் இருந்த 438 வாக்குகள் நீக்கப்பட்டு, 13ம் வார்டில் இணைக்கப்பட்டது. இந்நிலையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12 ஆவது வார்டில் இருந்து நீக்கப்பட்ட 438 வாக்குகளும் அதே வார்டில் கள்ள வாக்குகளாக பதிவு செய்யப்பட்டது. திமுகவினர் நடத்திய இந்த அரசியல் சூழ்ச்சி காரணமாக அதிமுக வேட்பாளர் சகாயராஜ் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

புதிய வாக்காளர் பட்டியல் வெளியிட்ட நிலையில், பழைய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட்டு கள்ள வாக்குப்பதிவு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டு, அது தொடர்பான அனைத்து ஆதாரங்களுடன் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாநில தேர்தல் ஆணையம் போன்றவற்றிற்கு அதிமுக வேட்பாளர் சகாயராஜ் புகார் மனு அளித்தார்.

இதனிடையே ஆதாரங்களுடன் அளிக்கப்பட்ட புகாரை ஏற்றுக்கொண்ட மாநில தேர்தல் ஆணையம் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், அனைத்து ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட பிறகும், திமுகவிற்கு சாதகமாக மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்டு நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றம் சாட்டிய அதிமுக வேட்பாளர் சகாயராஜ், ஒரு வாரத்திற்குள் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக தெரிவித்தார். மேலும், திமுகவினருக்கு உதவ வாக்காளர் படிவத்தை மாற்றிய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் கோரிக்கை விடுத்தார்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?