தமிழில் பெயர்ப்பலகை.. அபராதத்தை பல மடங்கு அதிகரிங்க.. பாவ மன்னிப்பு திட்டமா மாறிடக்கூடாது : ராமதாஸ் வலியுறுத்தல்!
Author: Udayachandran RadhaKrishnan2 September 2023, 4:57 pm
தமிழில் பெயர்ப்பலகை.. அபராதத்தை பல மடங்கு அதிகரிங்க.. பாவ மன்னிப்பு திட்டமா மாறிடக்கூடாது : ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஏற்கனவே, தமிழில் பெயர் பலகை வைக்காத வணிகர்களிடம் இதுவரை ரூ.50 மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த அபராதத்தை ரூ.2000-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழில் பெயர்ப்பலகை வைக்காத கடைகளுக்கான தண்டத்தை பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், தமிழ்நாட்டில் தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ள விதிகளின்படி தமிழுக்கு முதன்மையிடம் அளித்து பெயர்ப்பலகைகளை அமைக்காத கடைகளுக்கு இதுவரை ரூ.50 மட்டுமே தண்டம் பெறப்பட்டது.
இப்போது தண்டத்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்படவுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருகிறது. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் தான் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் பாமக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது.
இப்போது இந்தக் கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தான் தமிழைத் தேடி…. என்ற பெயரிலான 8 நாள் பரப்புரைப் பயணத்தை சென்னை முதல் மதுரை வரை மேற்கொண்டேன். அதன் பிறகு தான் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் சிக்கலில் தமிழக அரசு ஆர்வம் காட்டத் தொடங்கியது.
இது ஒரு நல்லத் தொடக்கம். அன்னைத் தமிழை காக்க நாம் இன்னும் வெகு தொலைவு பயணிக்க வேண்டும். தமிழில் பெயர்ப்பலகை அமைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கும் திட்டத்தை பாவ மன்னிப்பு திட்டமாக வணிகர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.
ரூ.2000 தண்டம் செலுத்தி விட்டால் அதன் பின்னர் ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ பெயர்ப்பலகைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து விடக்கூடாது.
இது தொடர்பாக பிறப்பிக்கப்படவுள்ள அரசாணையில், ஆணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பெயர்ப்பலகைகள் வைக்காவிட்டால், ரூ.2000 தண்டம் வசூலிக்கப்படும்; அபராதத்தை செலுத்தி விட்டு, பெயர்ப்பலகைகள் மாற்றப்படவில்லை என்றால் அந்தக் கடைகளுக்கு முதல் முறை ரூ.5000, அடுத்த முறை ரூ.10,000 என தண்டம் அதிகரிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட வேண்டும்.அதன் மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்குள் அனைத்து கடைகளின் பெயர்ப்பலகைகளும் தமிழில் மாற்றப்பட வேண்டும்.
தமிழைத்தேடி பயணம் தொடங்குவதற்கு முன்பாகவும், பயணத்தின் போதும், அதற்கு பிறகும் பல்வேறு தருணங்களில் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பெயர்ப்பலகைகளை தாங்களாகவே தமிழில் மாற்றுவதாக வணிகர் அமைப்புகள் உறுதியளித்தன. பல வணிகர்கள் கடைகளில் பெயர்ப்பலகைகளை மாற்றி அமைத்துள்ளனர்.
முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அரசாணை வெளியிடப்படும் வரை காத்திருக்காமல் வணிகர்களே தங்களது கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் மாற்றியமைத்து அன்னை தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.