கோவையில் நாளை தேசிய கயிறு வாரிய மாநாடு : தமிழக மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2022, 1:23 pm

கோவை : தேசிய கயிறு வாரிய மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு கயிறு வாரிய தலைவர் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் தேசிய கயிறு வாரிய மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

அப்போது கயிறு வாரிய தலைவர் குப்புராமு கூறியதாவது: மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம், ஒன்றிய அரசின் கயிறு வாரியத்துடன் இணைந்து தேசிய கயிறு வாரிய மாநாட்டை கோவையில் நாளை நடத்துகிறது.

தென்னை நார் மற்றும் கயிறு, கயிறு சார்ந்த பொருட்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த விதமாகவும் உள்ளன.

இந்த பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தென்னை பயிராகும் மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதில் தென்னை பயிராகும் மாநிலங்களின் அமைச்சர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்று கலந்துரையாட உள்ளனர். இந்த மாநாட்டில் கயிறு மற்றும் கயிறு சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வரும் சிறந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

தென்னை நாரை அதிக அளவில் ஏற்றுமதி செய்யாமல், அதில் மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்து உள்ளூரில் சந்தைப்படுத்தவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஊக்கப்படுத்தி வருகிறோம்.

மத்திய அரசு அலுவலங்களில் தென்னை நார் மூலம் தயாரிக்கப்பட்ட பிளைவுட்கள் மற்றும் மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதே போல் தமிழக அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!