நவராத்திரி திருவிழா… பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கான செய்தி… கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு..!!
Author: Babu Lakshmanan16 அக்டோபர் 2023, 4:49 மணி
நவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை பழனி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நவராத்திரி திருவிழா நேற்று மலைக்கோவிலில் காப்பு கட்டுடன் துவங்கியது. ஆண்டுதோறும் விமர்சியாக 15.10.2023 முதல் 23.10.2023 முடிய நவராத்திரி விழா ஒன்பது நாட்களுக்கு நடைபெறும். முக்கிய நிகழ்வான 23.10.2023 விஜயதசமி அன்று உச்சிக்கால பூஜை பகல் 12.00 மணிக்கும்.
அதனைத்தொடர்ந்து, பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும். மேலும் மாலை 3.00 மணிக்கு பராசக்தி வேல் புறப்பாடு ஆனதும் சன்னதி திருக்காப்பிடப்படும். பராசக்தி வேல் கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில் சென்று வன்னிகாசூரனை அம்பு போட்டு வதம் செய்து புறப்பாடாகி மலைக்கோயிலுக்கு திரும்ப வந்த பின்பு இராக்கால பூஜை நடைபெறும்.
மேற்படி நிகழ்வினைத்தொடர்ந்து 23.10.2023 அன்று காலை 11.30 மணியளவில் அனைத்து தரிசன கட்டணச்சீட்டுகளும் நிறுத்தப்படும். படிப்பாதை, வின்ச், ரோப்காரில் வரும் பக்தர்கள் காலை 11.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நவராத்திரி விழாவான நேற்று முதல் 23.10.2023 முடிய உள்ள நாட்கள் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது.
24.10.2023 அன்று மலைக்கோயிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற விபரம் பக்தர்களுக்கு அறிவிக்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0