நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரிப்பு : வாழ்த்து செய்தியில் தமிழக ஆளுநர் வைத்த ட்விஸ்ட்..!

Author: kavin kumar
25 January 2022, 10:35 pm

சென்னை : நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நாட்டின் 73-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவையும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த நாள் விழாவையும் உற்சாகத்தோடும், தேசியப் பெருமிதத்தோடும் கொண்டாடி வருகிறோம். இந்த நன்னாளில், தேச விடுதலை வீரர்களை, அவர்களின் தியாகங்களுக்காகவும் இன்னல்களுக்காகவும் நினைவுகூர்கிறோம். வீரமங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பிரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், முத்துராமலிங்கத் தேவர், ஜானகி தேவர் உள்ளிட்டவர்களுக்கு நம்முடைய நன்றி அறிதலை அவர்களுக்கு உரித்தாக்குகிறோம். தமிழகத்திலிருந்து பற்பல வீரர்களும் தியாகிகளும் தேச விடுதலை இயக்கத்தில் பங்கேற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதன்பின் அவர் கூறுகையில், ஒரே சமயத்தில் பதினொரு மருத்துவக் கல்லூரிகளை நம்முடைய மாநிலத்தில் திறந்து வைத்ததற்காக பாரதப் பிரதமருக்குத் தமிழக மக்களின் சார்பாக நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். இத்தனை மருத்துவக் கல்லூரிகள் ஒரே சமயத்தில் தொடங்கப்படுவது என்பது வேறெந்த மாநிலத்திலும் நடைபெறாத பெருஞ்சாதனையாகும். எனவே, நம்முடைய கூடுதல் கவனம் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதிலும் கல்வித் தரத்தை உயர்த்துவதிலும் இருக்கவேண்டும். நீட் தேர்வுக்கு முன் அரசு மருத்துவ கல்லூரிகளில் 1% க்கும் குறைவாக அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்தனர். 7.5% ஒதுக்கீட்டால் மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேரும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

உயர்கல்வி, பல்கலைக்கழகங்களுக்கு இருந்த பெயரையும், பெருமையையும் மீண்டும் பெற உழைப்போம். அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டியது நம் அவரச தேவை. அரசு, தனியார் பள்ளிகளுக்கு இடையேயான எதிர்மறை வேறுபாடுகள் கவலையை தோற்றுவிக்கின்றன. தனியார் பள்ளிகளில் ஏழைகளால் சேரமுடியாது. அரசு பள்ளிகள் மட்டுமே அவர்களுக்கான நம்பிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகத் தொண்மையான மொழி, தமிழேயாகும். இலக்கிய, பண்பாட்டு, ஆன்மிகச் செறிவுமிக்க மொழி. பல்வேறு பாரதீய மொழிகளுக்குத் தமிழ்மொழி பெருமை கூட்டியுள்ளது. நாட்டின் பிற பகுதிகளுக்குத் தமிழ்மொழி பரவுவதை ஊக்கப்படுத்த வேண்டும். மத்திய பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், பிரதமர் மோடியின் முனைப்பால், மகாகவி சுப்பிரமணிய பாரதி இருக்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய முனைப்புகள் பிற மாநிலங்களின் பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ்மொழியின் வளமையின் முழுப் பயனையும் நம் நாடு பெறவேண்டும். அதே நேரத்தில், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல், நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை. சகோதரத்துவம் வளர்ப்பதோடு, மொழிரீதியான அறிவு, பண்பாட்டு இடைச் சேர்க்கை, நம் அனைவரையுமே வளப்படுத்தும், நாட்டைச் செம்மைப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 3724

    0

    0