‘நீட்’டையும், ‘கியூட்’டையும் MUTE செய்ய வேண்டும் : திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2022, 10:40 pm

தேனி : “நீட்”. டையும் “கியூட்”. டையும் “மியூட்” செய்ய வேண்டும் என திராவிட கழகத் தலைவர் கீ வீரமணி கூறியுள்ளார்.

தேனியில் திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் முதல் சென்னை வரை நீட் தேர்வு எதிர்ப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பயணப் பரப்புரை கூட்டம் நடந்தது.

தேனி பங்களா மேட்டில் நடந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி பேசியதாவது: சமூக நீதி என்ற வார்த்தையே புதிய கல்வி கொள்கையில் இடம் பெறவில்லை. தொடக்க கல்வியில் இருந்து பல்கலைக்கழகம் வரை நுழைவு தேர்வு கொண்டுவருவார்கள். கடந்த 5 ஆண்டுகளாக நமது பிள்ளைகள் மருத்துவராகக் கூடாது என்பதற்காக கொண்டு வந்தது தான் இந்த நீட் தேர்வு.

நீட் தேர்வு ஆதரிப்பது கால் ஊன்ற முடியாத ஒரே கட்சி காவி கட்சி தான். “நீட்” பெரும் பிரச்னையாக வெடித்துக் கொண்டிருக்க தற்போது மத்திய அரசு கலைக்கழகம் கரை சேர “க்யூட் ” என்ற நுழைவுத்தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அது “நீட்”. இது “கியூட்”. இந்த இரண்டையும் “மியூட்” ஆக்க வேண்டும். அந்த வேலையை தான் மக்கள் செய்ய வேண்டும். அதற்கான அதிகாரம் உங்களிடம் தான் உள்ளது.

இலங்கையில் மிகப் பெரிய ஆட்டம் போட்ட ஒரு குடும்பம் இப்போது எங்கு போய் ஒளிவது என்று இடம் தேடிக் கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது

நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரம் எதேச்சதிகாரம் வந்துவிட்டது என்று துள்ளியவர்கள் எல்லாம் நிறைய பேர். ஹிட்லருக்கு இடம் எது என்றால் குப்பைத் தொட்டியிலே கூட இல்லை என்று வரலாற்றில் தெரியவருகிறது. எனவே இந்த பிரச்னையில் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறுகிறார். முதல்வர் என்ன அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆகிவிட்டது. ஆளுநரை நேரடியாக சந்தித்து நினைவூட்டப் பட்டிருக்கிறது. பிரதமரை நேரில் சந்தித்து முதல் கோரிக்கையாக நீட் ரத்து செய்ய சொல்லியாகி விட்டது.
இதற்கும் மேல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்வது தோள் மேல் ஏறி அமர்வதா?
அந்த அழுத்தத்தை நீங்கள் கொடுக்கலாமே. ஏனென்றால் இன்னும் நீங்கள் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தானே இருக்கிறீர்கள்?

உங்களை நன்றாக அடமானம் வைத்து விட்டீர்களே. உங்களையும் சேர்த்து மீட்பதற்கு அல்லவா போராடிக் கொண்டிருக்கிறோம். இது சாதி மத கட்சி பிரச்சினை அல்ல. மக்கள் பிரச்னை. பெற்றோர் பிரச்னை. பேரப்பிள்ளைகளின் பிரச்சனை. உங்கள் எதிர்காலத்தின் பிரச்சினை. எங்கள் பிள்ளைகள் பிரச்சனை அல்ல..உங்கள் பிள்ளைகளின் பிரச்சனை. அன்றைய குலக்கல்வித் திட்டம் நீடித்திருந்தால் இத்தனை பிள்ளைகள் வந்திருக்க முடியாது. இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி பேசினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ