தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி… பைக் மீது மோதி பயங்கரம் ; புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!
Author: Babu Lakshmanan6 July 2023, 4:16 pm
அம்பாசமுத்திரம் அருகே லாரி பைக் மோதல் சம்பவ இடத்திலே ஒரே குடும்பத்தை சேர்ந்த புதுமாப்பிள்ளை மற்றும் சிறுவன் உட்பட நான்கு பேர் பலி.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவருடைய மகன் இசக்கிராஜுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்த நிலையில், தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காக அவருடைய அம்மா அல்காரி(எ)சரஸ்வதி (50), அவரது தங்கை இசக்கியம்மாள் என்ற கார்த்திகா (25), தங்கையின் மகன் சந்துரு (2) ஆகிய நான்கு பேர்களும் ஒரே பைக்கில் பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் கோட்டாராங்களும் விலக்கு அருகில் வரும் பொழுது எதிரே டிப்பர் லாரியை அசோக் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், திடீரென அதன் அச்சு முறிந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தாறுமாறாக வந்த டிப்பர் லாரி எதிரே வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து பாபநாசம் நோக்கி ஒரே பைக்கில் வந்த இரண்டு வயது குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பைக்கை ஓட்டி வந்த இசக்கி ராஜ் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்துவிட்டார்.
சம்பவம் அறிந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இது சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர்.