அண்ணாமலை முன்பு பாஜகவில் இணைந்த சுயேட்சை நகராட்சி கவுன்சிலர் ; நடைபயணத்தின் போது நடந்த நிகழ்வு..!!!
Author: Babu Lakshmanan21 August 2023, 10:00 pm
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற என் மக்கள் யாத்திரையின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு கட்சியில் இணைந்தார் களக்காடு நகராட்சி கவுன்சிலர்.
என் மண் என் மக்கள் யாத்திரையின் 21ஆவது நாள் பயணம் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணத்தின் போது, களக்காடு கோவில் பத்து பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் தொண்டர்களோடு இணைந்து டீ குடித்தார்.
தொடர்ந்து கடை உரிமையாளரிடம் கடையில் ஒட்டப்பட்டு இருந்த பெயர் பலகை குறித்தும், கடும் டி என்றால் என்ன என்பது குறித்தும் விளக்கமாக கேட்டறிந்தார். 40 தொகுதியிலும் 40 வகையான டீ இருப்பதாகவும், அங்கிருந்து அவர்களுடன் பேசி சிரித்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட நடை பயணத்தின் போது, சாலையில் நின்றிருந்த சிறுவர்கள் பார்த்து கையசைத்தவுடன் அருகில் சென்று அவர்களிடம் உரையாடினார். அப்போது, ஒரு சிறுவன் பாக்ஸ் கட்டிங் ஸ்டைலில் முடி வெட்டப்பட்டிருப்பதை கண்ட அவர், இது போன்றெல்லாம் முடி வெட்டாதீர்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் இந்த பயணத்தின் போது களக்காடு நகராட்சியின் 17வது வார்டு தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சங்கரநாராயணன் என்பவர் அண்ணாமலைக்கு சால்வே அனுவித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.