கைதிகளுக்கு இடையே மோதல்… கம்பியால் குத்தி விசாரணை கைதி கொலை முயற்சி ; பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
7 February 2024, 4:41 pm

திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஒரே கொலை வழக்கில் கைதான விசாரணை கைதிகள் இருதரப்பாக பிரிந்து கொண்டு தாக்குதல் நடத்தியதில் மருதவேல் என்பவர் நெஞ்சு பகுதியில் கம்பியால் குத்தப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் இருக்கின்றார்கள். சிறைச்சாலையில் அவ்வபோது கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் தூத்துக்குடியில் 2019 ஆம் ஆண்டு ராம்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான விசாரணை கைதிகள் மருதுவேல், பாலசுப்ரமணியன், சுந்தர மூர்த்தி, ஆகியோர் ஒன்றாக பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் மூன்று பேருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில், பாலசுப்ரமணியன், சுந்தர மூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு மருதவேலை கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால், நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த சிறை துறை அதிகாரிகள் உடனடியாக காயம் அடைந்த மருதவேலை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் பாதுகாப்போடு அவருக்கு அந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சில வருடங்களுக்கு முன்பு முத்து மனோ என்ற விசாரணை கைதி கற்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவ்வபோது கைதிகளுக்குள் ஏற்படும் மோதல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!