திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா.. மக்கள் பணி எதுவுமே செய்யவில்லை என விரக்தி… ஓட்டு போட்ட மக்களிடம் மன்னிப்பு..!!
Author: Babu Lakshmanan1 March 2024, 4:23 pm
நெல்லை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் திடீர் ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தும் மக்கள் பணி நடைபெறாததால் இந்த முடிவு எடுத்தள்ளதாக சொல்கிறார்
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், கவுன்சிலர்கள் இடைடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே சமீபத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். திமுக தலைமை அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் கவுன்சிலர்களை சமாதானப்படுத்தியது. எனவே மேயர் பதவி தப்பியது.
இந்த நிலையில், 7வது வார்டு கவுன்சிலர் இந்திரா மணி இன்று தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவை நேரில் சந்தித்து கவுன்சிலர் இந்திரா மணி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதுகுறித்து கவுன்சிலர் இந்திரா மணி அளித்த பேட்டியில், எனது வார்டில் எந்த மக்கள் பணியும் நடைபெறவில்லை. குறிப்பாக பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். அதற்கு அடிக்கல் நாட்டியதோடு பணியை கிடப்பில் போட்டு விட்டனர். அதேபோல் சாலைகள் அமைப்பது உட்பட எந்த ஒரு அடிப்படை பிரச்சினைக்கும் நிதி ஒதுக்காமல் அலட்சியப்படுத்துகின்றனர். மேயரிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. எனக்கு வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அதனால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன், என்று தெரிவித்தார்.
இது குறித்து கவுன்சிலர் இந்திரா மணியின் கணவர் சுண்ணாம்பு மணி அளித்த பேட்டியில் :- நாங்களும் பலமுறை போராடிவிட்டோம், எந்த பணியும் எங்கள் வார்டில் நடைபெறவில்லை. எங்கள் வார்டு தொடர்பான ஆவணங்களை மட்டும் ஒழித்து வைக்கின்றனர். ஆளுங்கட்சியாக இருந்தும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். கேட்டால் கட்சியில் பிரச்சனை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள்.
எனவே பொறுப்பு அமைச்சரிடம் கூறினால் அவரும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. மக்கள் எங்களை மன்னிக்க வேண்டும். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் ராஜினிமா செய்து விட்டதாக, தெரிவித்தார்.
இதற்கிடையில் முறைப்படி கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்தை மேயரிடம் தான் வழங்க வேண்டும் என்பதால், இந்த ராஜினாமா கடிதம் செல்லாது என்றும், சம்பந்தப்பட்ட ஏழாவது வார்டில் பல்வேறு பணிகள் நடந்து வருவதாகவும் ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சியில் ஆரம்பத்திலிருந்து மேயர், கவுன்சிலர் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த சூழலில், பெண் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
0
0